அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் வொஷிங்டனில் தயாரிக்கப்பட்டு வரும் புதிய வரைவு விவாதக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, ஈரானின் எண்ணெய் துறை மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை தற்காலிகமாக நீக்குவதற்கு அமெரிக்கா உடன்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறுதி உடன்பாட்டை எட்டிய பின்னரே தடைகளை நீக்குவதற்குப் பதிலாக, பேச்சுவார்த்தை செயல்முறை நடந்து கொண்டிருக்கும் போதே சில தடைகளை தளர்த்துவதற்கு இதில் இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த சமீபத்திய முன்மொழிவானது முந்தைய முன்மொழிவுகளிலிருந்து வேறுபடுகின்றது.
இருப்பினும், நீண்ட கால ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளும் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
எதிர்கால ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் முதன்மையான அர்ப்பணிப்பாக இந்தத் தடைத் தளர்த்தல் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்பதே ஈரான் நிர்வாகத்தின் கருத்தாக உள்ளது.
ஆனால், இறுதி உடன்பாட்டை எட்டும் வரை மட்டுமே செல்லுபடியாகும் வகையிலான தற்காலிக தடை நீக்க பொறிமுறையொன்றையே (Temporary mechanism) அமெரிக்கா தற்போது முன்வைத்துள்ளது.
பாகிஸ்தான் ஊடாக புதிய முன்மொழிவு: இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவும் கடுமையான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் தயாரித்த திருத்தப்பட்ட புதிய முன்மொழிவொன்று, பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் உடன்பாடின்றி முடிவடைந்த போதிலும், அமெரிக்காவிடமிருந்து கிடைத்த சமீபத்திய முன்மொழிவுகளுக்கு தாம் பதிலளித்துள்ளதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களுடன் ஆரம்பமான இந்த யுத்தம் காரணமாக, ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் கொந்தளிப்பான நிலையை எதிர்கொண்டுள்ளதுடன், உலக சந்தையில் எரிசக்தி (எண்ணெய்) விலைகளும் வேகமாக அதிகரித்துள்ளன.
டொனால்ட் ட்ரம்பின் கடும் எச்சரிக்கை: இவ்வாறான பின்னணியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக ஊடகப் பக்கத்தில் பதிவொன்றை இட்டு ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைதி ஒப்பந்தமொன்றை எட்டத் தவறினால் ஈரானில் "எதுவும் எஞ்சியிருக்காது" என அவர் அச்சுறுத்தியுள்ளார். "ஈரானுக்கான நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது, அவர்கள் அவசரப்பட வேண்டும். காலம் மிகவும் பொன்னானது," என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.