'பொறுப்புக்கூறல் குறித்த அரசாங்கத்தின் கடமையை நினைவூட்டுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு': HRW

'பொறுப்புக்கூறல் குறித்த அரசாங்கத்தின் கடமையை நினைவூட்டுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு': HRW

பதினேழு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயப்பகுதியாக அறிவிக்கப்பட்ட கடற்கரையோர நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்டிருந்த போது, ​​அரச பாதுகாப்புப் படையினரால் கடல், தரை மற்றும் வான்வழியாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதத் தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோருக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக, மே 18 ஆம் திகதியை "தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தேசிய எழுச்சி நாள்" எனப் பிரகடனப்படுத்தி, முள்ளிவாய்க்கால் மண்ணில் தங்களின் உறவினர்களை நினைவுகூர தமிழ் மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ் இனப்படுகொலை வாரத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு முழுவதும் கஞ்சித் தானம் உள்ளிட்ட நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இதன் நிறைவாக, 2026 மே 18 திங்கட்கிழமை முற்பகல் 10:31 மணிக்கு ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது, ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் கண்ணீர் மற்றும் கதறல்களுக்கு மத்தியில், இறுதிப் போரில் தனது குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் ஐவரை இழந்த போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய் ஒருவரால் இம்முறை நினைவேந்தல் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில், மலர்கள், தூபதீபங்கள் ஏற்றி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஒன்றுகூடியிருந்த சர்வதேச தூதுக்குழுக்களின் பிரதிநிதிகளும் மனித உரிமைகள் அமைப்புகளின் தலைவர்களும் தங்களின் இந்த வருகையை - யுத்தக் குற்றங்கள் தொடர்பில் இதுவரை நிறைவேற்றப்படாத நீதியை அரசாங்கத்திற்கும் சர்வதேச வல்லரசுகளுக்கும் நினைவூட்டுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவே வர்ணித்தனர்.

"குற்றவாளிகள் தொடர்பான விசாரணைகளோ, வழக்குத் தொடரல்களோ அல்லது அவர்கள் தண்டிப்பதோ எதுவும் நடப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை" என்று நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் (HRW) அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் எலைன் பியர்சன் (Elaine Pearson) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பூமியில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

"பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கும் கடப்பாட்டையும், பதினேழு வருடங்களுக்கு முன்னர் நடந்தவற்றுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நினைவூட்டுவதற்கு இதுவொரு சிறந்த சந்தர்ப்பம் என்று நான் நினைக்கிறேன்."

படுகொலை செய்யப்பட்ட தங்களின் உறவினர்களை நினைவுகூருவதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணிற்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு, கடந்த வருடங்களைப் போலவே இம்முறையும் தென்னம்பிள்ளைகள் விநியோகிக்கப்பட்டன. உயிரிழந்த தங்களின் அன்பிற்குரியவர்களின் நினைவாக இந்தத் தென்னம்பிள்ளைகளை நட்டு, அதை ஒரு உயிருள்ள நினைவிடமாக கருதுவதே இதன் நோக்கமாகும் என அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ் மக்களுக்கு எதிராக வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நிறைவு நாளில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற பிரதான நினைவேந்தல் நிகழ்வில், இலங்கையின் தென்பகுதியிலிருந்து (சிங்களப் பகுதியிலிருந்து) வருகை தந்திருந்த சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை மிகக்குறைந்தளவிலேயே (விரல் விட்டு எண்ணக்கூடியளவு) காணப்பட்டதாக உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற 17ஆவது நினைவேந்தலுக்கு இணைவாக, இனப்படுகொலைக்கு இரையாக்கப்பட்ட தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள் மற்றும் வேதனைகள் குறித்த நினைவுகளை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் "நினைவாயுதம்" என்ற பெயரில் முள்ளிவாய்க்கால் தொடர்பான புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் நினைவுப் பொருட்களை உள்ளடக்கிய மூன்று நாள் கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, போரில் கொல்லப்பட்ட வட பகுதி தமிழ் மக்களை நினைவுகூருவதற்காகக் கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தவர்களை நோக்கி, கடந்த வருடங்களைப் போலவே இம்முறையும் தீவிரவாதப் போக்குடைய சில சிங்களக் குழுவினர் வெறுப்புப் பேச்சுக்களை (Hate speech) பிரயோகித்து வசைபாடியதுடன், மோதல்களுக்கு அழைப்பு விடுத்ததாகக் கொழும்பு ஊடகவியலாளர்கள் அறிக்கை செய்துள்ளனர்.

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டிருந்த இம்முறை நினைவேந்தலின் போது, 'முள்ளிவாய்க்கால் பிரகடனம்' தென்கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாரினால் வாசித்துக் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழ் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலைக் கோரும் போராட்டங்கள், காணி மீட்புப் போராட்டங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரும் போராட்டங்கள் யாவும் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டு வருவதுடன், ஈழத் தமிழ் மக்களின் கூட்டு மனநிலைக்கு (Collective mindset) எதிராக ஒரு பாரிய யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"எங்களிடம் நினைவுகள் இருக்கும் வரை, யாராலும் எங்களை அழித்துவிட முடியாது" என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வருடமானது வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் 50ஆவது ஆண்டு நிறைவைக் குறிப்பதுடன், சுதந்திரமான மற்றும் இறையாண்மையுள்ள தமிழீழக் குடியரசே தமிழ் மக்களின் கூட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யும் என்பதை உரக்கப் பிரகடனப்படுத்திய வரலாற்று நிகழ்வு அது என்பதையும் முள்ளிவாய்க்கால் பிரகடனம் நினைவூட்டுகின்றது.

தமிழ் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் சிங்கள-பௌத்த மயமாக்கலைத் தடுப்பதற்கும், தமிழ் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியைக் கோருவதற்கும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்துவதற்கும், திட்டமிட்ட தமிழ் இனப்படுகொலையைத் தடுப்பதற்கும், தமிழ் தேசியக் கொள்கைகளை (அபிவலாஷைகளை) அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்து போராடுவதற்கும் முள்ளிவாய்க்கால் பிரகடனத்தின் இறுதியில் உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.