குறுக்குவழிகளைக் கையாண்டு பதவிகளை அள்ளி வழங்குவதொன்றும் இலங்கை அரசியல் வரலாற்றில் புதிதல்ல. ஆனால், மாற்றங்களைச் செய்து காட்டுவோம் என்று மக்களை ஏமாற்றி ஆட்சி பீடமேறிய அநுர அரசாங்கத்திலும் அத்தகைய குறுக்குவழிகள் கையாளப்படுவதுதான் இங்கு கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் ஊதுகுழலாகச் செயற்படுகின்ற ஊடக நிறுவனங்களில் லேக்ஹவுஸ் மிக முக்கியமானது. அந்நிறுவனத்திலிருந்து வெளியிடப்படுகின்ற ஒரேயொரு தமிழ்ப் பத்திரிகை தினகரன். அதனுடைய பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய செந்தில் வேலர், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்குள்ளாகிப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஊழலற்ற செயலுக்காகப் பாடுபடுகின்ற அரசாங்கம் என்பதை நிரூபிப்பதற்காக அவ்வப்போது இவ்வாறான அதிரடிகள் இடம்பெறுவதுண்டு. அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை விசாரணைகளின் முடிவில்தான் அறிந்துகொள்ள முடியும்.
ஆனால், இவ்விவகாரத்தில் மிகமுக்கியமாகக் கவனிக்கவேண்டிய மற்றுமொரு விடயம் அரங்கேறியிருக்கிறது. செந்தில் வேலரின் பதவிநீக்கத்தின் பின்னர், தற்காலிக ஆசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டு பதவி கொடுத்திருக்கும் நபர் தொடர்பில்தான் இங்கு கவனிக்கவேண்டியுள்ளது. தற்போது பிரதம ஆசிரியராக குறுக்கு வழியில் நியமிக்கப்பட்டுள்ள சுரேஷ; ராஜ் என்பவர், அந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்தானா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
தினகரன் ஆசிரியர் பீடத்திலும் இவரின் நியமனம் தொடர்பில் அதிர்ப்தி நிலவுகிறது. முலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதி அமைச்சர் பிரதீபின் சிபாரிஸின் பேரிலேயே சுரேஷ; ராஜூக்கு பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய பொறப்பிலிருக்கும் ஒருவராலேயே குறுக்குவழி ஏற்படுத்;திக் கொடுக்கப்பட்டிருப்பது மிகக் கேவலமான செயலாகும்.
சுரேஷ; ராஜ் என்பவர் தினகரனில் உதவி ஆசிரியராக இருந்தவர். இது பிரதம ஆசிரியர் பதவிக்கு அடுத்தடுத்துள்ள பதவிகளின் பட்டியலில் 08 அல்லது 09ஆவது இடத்தில் உள்ள ஒரு பதவி நிலையாகும். ஊதவி ஆசிரியரின் பணி, செய்திகளைச் செப்பனிடுவதாகும்.
பிரதம ஆசிரியருக்கு அடுத்த நிலையில் உதவி ஆசிரியர் வருவதில்லை. தினகரன் பத்திரிகையில் 07 உதவி ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்குப் பொறுப்பாக 'பிரதம உதவி ஆசிரியர்' செயற்படுகிறார். அந்தப் பதவி 3 வருடங்களாக தினகரனில் வெற்றிடமாக உள்ளதால், அந்தப் பதவிக்குரிய பணியை சிரேஷ;ட உதவி ஆசிரியர் ஒருவர் தற்காலிகமாக மேற்கொள்கிறார். தற்போது பிரதம ஆசிரியராக குறுக்கு வழியில் நியமிக்கப்பட்டுள்ள சுரேஷ; ராஜ் என்பவர் 07 உதவி ஆசிரியர்களில் ஒருவராவார் என்பது கவனிக்கத்தக்கது.
இவர் முன்னர் பணியிலிருந்து விலகிச் சென்றதால், இவருடைய தொடர் பணிக்கால சேவை காலாவதியாகியுள்ளது. எனவே, நிறுவன கொள்கையின் பிரகாரம், இவரின் முன்னைய பணிக்காலம் கணக்கில் எடுக்கப்படமாட்டாது. அதன்படி, சுரேஷ் ராஜ் என்பவர் - கடந்த ஆண்டு ஜூலையில்தான் மீண்டும் இணைந்தார் என்பதால், அவரின் சேவைக் காலம் - வெறும் 10 மாதங்கள் மட்டும்தான். அதனால் அங்குள்ள உதவி ஆசிரியர்கள் 07 பேரிலும் சேவைக்காலம் குறைந்தவர் சுரேஷ; ராஜ் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்னொருபுறம், தினகரனில் பணியாற்றும் உதவி ஆசிரியர்கள் பலர் - அனுபவம் மிக்கவர்கள். செய்தி சேகரிப்பு, கட்டுரை எழுதல், நேர்காணுதல் என மேலதிகமான தகைமைகளைக் கொண்டவர்கள். தினகரனில் இரண்டு வருடங்களாக 'செய்தி ஆசிரியர்' பதவி வெற்றிடமாக உள்ளது. சுரேஷ் ராஜ் - முதலில் இந்தப் பதவியைப் பெறுவதற்குத்தான் முயன்றார்.
அந்தப் பதவிக்கு இவர் தகுதி இல்லாத நிலையில், பிரதம ஆசிரியரினால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தினகரன் வட்டாரங்கள் கூறுகின்றன. இவ்வாறான பின்னணியில்தான், அவருக்கு இந்தக் குறுக்கு வழி வாய்ப்பை அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் பிரதீப் வழங்கியிருக்கிறார்.
ஊடகத்தில் இவ்வாறான குறுக்கு வழி வாய்ப்புகளை வழங்குவதனூடாக ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதைத் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கண்டும் காணாமலும் இருப்பது பெரும் சாபக்கேடானது. ஏற்கெனவே பல ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவரும் இக்காலகட்டத்தில், இவ்வாறான குறுக்குவழி அதிகாரப் பகிர்வு என்பது ஊடக சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
தமக்குத் துதிபாடும் ஊடகவியலாளர் என்ற போர்வையில் செயலாற்றும் கட்சித் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் அள்ளி அரவணைக்கும் அநுர அரசின் இத்தகையை செயல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இத்தகைய முறைகேடுகளினூடாக ஊடக சுதந்திரம் கேள்விக்குள்ளாகுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகையால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, ஊடக சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.