யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக நாட்டில் பல்வேறு இனப் பிரிவினர்கள் காணப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வுகளை வழங்க வேண்டும். அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க வேண்டியது ஜெனீவாவில் அல்ல. எமது நாட்டு பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றும்போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மூன்று தசாப்த கால கொடூரம் நிறைந்த யுத்தத்தினால் பாதிப்புகளுக்கு ஆளான மக்களை, இராணுவ வெற்றியின் மூலம் மீட்டெடுத்த சுதந்திர நாடொன்று நம்மிடம் உள்ளது. சிறப்பு மிக்க இந்நாளில், இந்த யுத்த வெற்றிக்கு அரசியல் ரீதியாக தலைமைத்துவத்தைப் பெற்றுத் தந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இராணுவத் தளபதியாகத் தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட, முப்படைகளையும் சேர்ந்த வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பை துறையினர்களுக்கும் எனது விசேட மரியாதையைச் செலுத்திக் கொள்கிறேன்.
தங்கள் குடும்பங்களை இரண்டாம் இடத்திலும், நாட்டை முதல் இடத்திலும் வைத்து, நாட்டைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் உயிர்களையும், உடல் பாகங்களையும், இரத்தத்தையும் தியாகம் செய்த வீரமிக்க முப்படை வீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்.
யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் இப்போது வளர்ந்தவர்களாகி இளைஞர்களாக இருப்பர். என்றாலும் அன்று ஏற்பட்ட வேதனைகள், துன்பங்களை நாங்கள் அறிவோம். பயங்கரவாத யுத்தத்தினாலேயே நானும் எனது தந்தையை இழந்தேன். இதனால் எனக்கும் அந்த வேதனை புரியும். இராணுவ குடும்பங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களின் வேதனைனகளை அறிவோம்.
இவ்வேளையில் இராணுவ வீரர்கள் என்ற வசனத்தை நாங்கள் பயன்படுத்த தயங்கக்கூடாது. அத்துடன் இனியும் அதுபோன்ற ஒரு யுத்தம் ஏற்பட்டு விடக்கூடாது. அவ்வாறு ஏற்படாத வகையில் நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மீளக்கட்டியெழுப்புதல் செயற்பாடுகள் மூலமும், சகோதாரத்துவம், நல்லிணக்கம் சூழலை உருவாக்கி நாங்கள் எமது நாட்டுக்குள் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே இந்நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு போன்ற பிரச்சினைகள் இந்த இனங்கள் மதங்கள் இடையே சகோதரத்துவம் நல்லிணக்கம் ஏற்படுவதன் மூலம் மட்டுமே ஏற்படும்.
இதன் பிரகாரம், யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வுகளை எமது நாட்டுக்குள்ளேயே வழங்க வேண்டும். எப்போதும் வருடாந்தம் ஜெனீவாவுக்கு சென்று கதைப்பது நிறுத்தப்படும் வகையில் ஒருமைப்பாடு, ஆட்புல எல்லை, இறைமை மற்றும் அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் யோசனையை முன்வைக்கின்றேன்.
அவ்வாறே, படை வீரர்களின் குடும்பங்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய உரிய இடத்தை ரணவிரு சேவா அதிகார சபை ஊடாக மாத்திரம் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதால், அமெரிக்காவைப் போன்று பிரத்தியகமான திணைக்களமொன்றை தாபித்து, படை வீரர்களின் நலன்புரித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
கொடூரமான பயங்கரவாத யுத்தத்தின் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் மூலம் நாட்டின் பிரச்சினைகள் நாட்டுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.