நைஜீரியா மற்றும் அமெரிக்க கூட்டுத் தாக்குதல்: ஐஎஸ் (IS) பயங்கரவாதிகள் 175 பேர் உயிரிழப்பு!

நைஜீரியா மற்றும் அமெரிக்க கூட்டுத் தாக்குதல்: ஐஎஸ் (IS) பயங்கரவாதிகள் 175 பேர் உயிரிழப்பு!

நைஜீரிய மற்றும் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் இணைந்து நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில், ஐஎஸ் (IS) அமைப்பின் இரண்டாவது உயர்மட்டத் தலைவர் உட்பட 175 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து நைஜீரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகளவில் செயல்பட்டு வரும் "மிகவும் சுறுசுறுப்பான பயங்கரவாதி" என்று வர்ணிக்கப்படும், ஐஎஸ் அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகளுக்கான தலைவர் அபூ-பிலால் அல்-மினுகி (Abu-Bilal al-Minuki) வடகிழக்கு நைஜீரியாவின் தூரப் பிரதேசக் கிராமமொன்றில் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் போகோ ஹராம் (Boko Haram) மற்றும் அதிலிருந்து பிரிந்து சென்ற ஐஎஸ் மேற்கு ஆப்பிரிக்கப் பிரிவு (ISWAP) ஆகியவற்றால் கடுமையான ஆயுதமேந்திய தீவிரவாத கிளர்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பதிவாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, கடந்த 17 ஆண்டுகால மோதல்கள் காரணமாக இதுவரை 40,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கப் படையினர் நைஜீரியாவிற்கு வருகை தந்தது ஆலோசனை மற்றும் பயிற்சிகளுக்காக மட்டுமே என்று கூறப்பட்ட போதிலும், இந்த பிரமாண்ட கூட்டுத் தாக்குதலின் மூலம் அமெரிக்கப் படைகள் அங்கு நேரடியாகவும் தீவிரமாகவும் இராணுவ நடவடிக்கைகளில் பங்கெடுத்து வருகின்றமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.