ஐக்கிய நாடுகள் சபை (UN) 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பைக் குறைத்துள்ளது.
மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக பணவீக்க அழுத்தம் மீண்டும் அதிகரிப்பதும், பொருளாதார ஸ்திரமற்ற தன்மை தீவிரமடைவதும் இதற்கு முக்கிய காரணங்கள் என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐநா சபையின் “உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள்” (World Economic Situation and Prospects) என்ற அரையாண்டு மேம்படுத்தப்பட்ட அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2.5% ஆக இருக்கும் என முன்கணிக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் மதிப்பிடப்பட்ட 3.0% வளர்ச்சியை விடக் குறைவான மட்டமாகும்.
மேலும், இது கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட முன்கணிப்பை விடவும் 0.2 சதவீத புள்ளிகளால் குறைவானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், 2027 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 2.8% மட்டம் வரை ஒரு சிறிய மீட்சியை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான தொழிலாளர் சந்தை, நுகர்வோர் தேவையின் ஸ்திரத்தன்மை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வளர்ச்சி என்பன பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், ஒட்டுமொத்த உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டம் தொடர்ந்து பலவீனமடைந்து வருவதாக அது வலியுறுத்தியுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்கள் நன்மையடைந்துள்ள போதிலும், அது வீட்டு மற்றும் வணிகச் செலவுகள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகளின் பணவீக்கம் 2025 ஆம் ஆண்டில் காணப்பட்ட 2.6% இலிருந்து 2026 இல் 2.9% ஆக அதிகரிக்கும் என முன்கணிக்கப்பட்டுள்ளதுடன், வளரும் நாடுகளில் அது 4.2% இலிருந்து 5.2% வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக விவசாய உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளன. இது விளைச்சலைக் குறைப்பதுடன், உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நிதிச் சந்தை ஸ்திரமாக இருந்தபோதிலும், பணவீக்க எதிர்பார்ப்புகள் காரணமாக குறுகிய காலப் பத்திரங்களின் லாப வீதங்கள் (Bond Yields) அதிகரித்துள்ளன.
பாதிப்புகளுக்கு அதிகமாக முகம் கொடுத்துள்ள பிராந்தியம் மேற்கு ஆசியாவாகும். அங்கு உள்கட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் காரணமாக அதன் பொருளாதார வளர்ச்சி 3.6% இலிருந்து 1.4% ஆகக் குறையும் என முன்கணிக்கப்பட்டுள்ளது.
வலுவான உள்நாட்டுத் தேவை மற்றும் தொழில்நுட்ப முதலீடுகள் காரணமாக, அமெரிக்கப் பொருளாதாரம் 2026 இல் 2.0% வளர்ச்சியுடன் ஒப்பீட்டளவில் ஸ்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியில் அதிகமாகத் தங்கியிருப்பதால் அதிக ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சி 1.5% இலிருந்து 1.1% ஆகவும், பிரித்தானியாவின் வளர்ச்சி 1.4% இலிருந்து 0.7% ஆகவும் குறையும் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சீனாவின் பன்முகப்படுத்தப்பட்ட எரிசக்தி கட்டமைப்பு, போதுமான இருப்புக்கள் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் ஓரளவுக்குப் பாதுகாப்பைப் பெற்றுள்ளதுடன், அதன் வளர்ச்சி 5.0% இலிருந்து 4.6% ஆக மந்தமடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% இலிருந்து 6.4% ஆகக் குறையக்கூடும் என்றும், ஆப்பிரிக்காவின் சராசரி வளர்ச்சி 4.2% இலிருந்து 3.9% ஆகச் சற்று வீழ்ச்சியடையும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை முன்கணித்துள்ளது.