பேரினவாத சுழற்சிக்குள் மீண்டும் சிக்குகிறதா இலங்கை?

பேரினவாத சுழற்சிக்குள் மீண்டும் சிக்குகிறதா இலங்கை?

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தேசத்தின் அரசியல் பரப்பில் 'தேசியவாதம்' என்னும் ஆயுதம் மீண்டும் மிகத் தீவிரமாக கையில் எடுக்கப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிர்வாகத் தோல்விகளால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தார்மீகக் கோபத்தை திசைதிருப்பி, அதனை மீண்டும் ஒருமுறை இன-மத ரீதியான அச்சமாக மாற்றுவதற்கான அரசியல் சதுரங்க ஆட்டம் அரங்கேறத் தொடங்கியுள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான, தெளிவற்ற கருத்தியல் திசையைக் கொண்ட எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் போன்ற வழக்கமான உத்திகள், இந்த தீவிர தேசியவாத சக்திகளுக்குப் போதுமானதாகத் தெரியவில்லை.

தங்களுக்கு ஆட்சி அதிகாரம் வெகுதொலைவில் சென்றுவிட்டதை உணர்ந்துள்ள இந்தச் சக்திகள், தென்னிலங்கை அரசியல் களத்தில் மீண்டும் தமக்கான விளம்பரப் பலனைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், செயற்கையான மோதல்களை உருவாக்கத் தலைப்பட்டுள்ளனர்.

அண்மையில், மே 18 நினைவேந்தல் வாரத்தில், கொழும்பு ரணவிரு (மாவீரர்) நினைவுத் தூபிக்கு அருகில் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்துக்கொண்டு ஒரு குழுவினர் நடத்திய நாடகத்தனமான ஆர்ப்பாட்டம், தென்னிலங்கையில் மீண்டும் ஒரு தீவிரவாதப் போராட்டம் தீவிரமடைவதற்கான வலுவான அறிகுறியாகும்.

இலங்கையின் தேசியப் பிரச்சினையின் ஆழமான சிக்கலை மே 18ஆம் திகதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த நாள், தெற்கில் உள்ள ஒரு தரப்பினருக்கு 'யுத்த வெற்றியின்' பெருமித நாளாகக் கொண்டாடப்படும் வேளையில், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு அது போரில் மடிந்த தமது உறவுகளையும், காணாமல் ஆக்கப்பட்டோரையும் நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்துவதற்கான 'துக்க நாளாக' அமைகிறது.

வரலாற்றின் ஒரே நிகழ்வை, இரு வேறுபட்ட சமூகங்கள் முற்றிலும் முரணான நினைவுகள், உணர்வுகள் மற்றும் அரசியல் விளக்கங்களுடன் அணுகுகின்றன. இங்கு 'வெற்றி' என்பதும் 'துக்கம்' என்பதும் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் அரசியல் மொழிகளாக உருவெடுத்துள்ளன.

இத்தகையதொரு சூழலில், உண்மையான நல்லிணக்கம் என்பது ஒரு தரப்பின் நினைவுகளை பலவந்தமாக அழிப்பதில் இல்லை; மாறாக, அனைத்து தரப்பினரினதும் வரலாற்று வலிகளையும் அனுபவங்களையும் பரஸ்பரம் அங்கீகரிப்பதில்தான் உள்ளது. ஆனால், இலங்கையின் பேரினவாத அரசியல் எப்போதும் இதற்கு நேர் எதிர்த்திசையிலேயே பயணித்து வந்துள்ளது.

தீவிர தேசியவாத அரசியல் சக்திகள், மீண்டும் இராணுவக் குறியீடுகளையும், 'இனம் மற்றும் மதம் ஆபத்தில் உள்ளது' என்ற அச்சக் கோட்பாட்டையும் (Fear Psychosis) முன்னிறுத்தி, தங்களுக்குப் புதிய அரசியல் உயிர் ஊட்ட முடியும் என நம்புகின்றன.

இங்கு இராணுவம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்புப் பிரிவாக மட்டும் பார்க்கப்படாமல், "சிங்கள-பௌத்த அரசின் இரட்சகராக" குறியீட்டு ரீதியாகக் கட்டமைக்கப்படுகிறது. இதன் மூலம், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார அவலங்கள் மீதான கவனம் திசைதிருப்பப்பட்டு, நாட்டின் பாதுகாப்புப் பற்றிய போலிப் பயம் உட்செலுத்தப்படுகிறது.

மறுபுறம், ராஜபக்ஷர்களின் அரசியலும் தங்களின் வீழ்ச்சியடைந்த அரசியல் செல்வாக்கை மீட்டெடுப்பதற்காக, மேலும் தீவிரமானதொரு இன-மத தேசியவாதப் பாதையைத் தேர்ந்தெடுக்கத் தயாராக இருப்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன.

வரலாற்றுப் பதிவுகளின்படி, கடுமையான பொருளாதார நெருக்கடிகளும் அரசியல் ஸ்திரமற்றதன்மையும் நிலவும் காலப்பகுதிகளில், மக்களை மிக எளிதாகத் திரட்டுவதற்கான ஒரு கருவியாக தேசியவாதம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 'தேசம்', 'மதம்', 'ரணவிருவோ' மற்றும் 'தேசிய பாதுகாப்பு' போன்ற உணர்ச்சிப்பூர்வமான குறியீடுகள் மூலம் மக்களின் பயமும் கோபமும் அரசியல் மூலதனமாக மாற்றப்படுகின்றன.

ஆயுத முனையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், இலங்கையின் தேசியப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், கூட்டு நினைவுரிமை, நீதி மற்றும் சமத்துவம் சார்ந்த கோரிக்கைகளுக்கு இன்னும் முறையான தீர்வு எட்டப்படவில்லை.

அதேநேரம், தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியிலும் 'அரசு பறிபோய்விடும்', 'சிங்கள இனம் ஆபத்தில் உள்ளது' என்ற அச்ச உணர்வு அரசியல் ரீதியாகத் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும், பாதுகாப்பற்ற உணர்வுடனும் நோக்கும் ஒரு முடக்கப்பட்ட அரசியல் கலாசாரத்துக்குள் சிறைப்பட்டுள்ளனர்.

எனவே, இலங்கையின் தற்போதைய உண்மையான சவால் என்பது வெறும் ஆட்சி மாற்றமோ அல்லது ஒரு தேர்தல் வெற்றியோ அல்ல. மாறாக, நாட்டைத் தொடர்ந்து இனவாத மற்றும் மதவாத நச்சுச் சுழற்சிக்குள் வைத்திருக்க முயற்சிக்கும் குறுகிய அரசியலில் இருந்து விடுபடுவதே ஆகும்.

அனைத்துப் பிரஜைகளுக்குமான சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய முற்போக்கான அரசியல் கலாசாரத்தை நோக்கி இலங்கையர்களால் நகர முடியுமா என்பதே இன்றைய காலத்தின் முதன்மையான வினாவாகும்.