எதிர்வரும் ஜூலை மாத தொடக்கத்திற்குள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறந்துவிடப்படாவிடின், அவ்வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்காக இராணுவப் படைகளைப் பயன்படுத்துவது குறித்து நேட்டோ (NATO) இராணுவக் கூட்டணி தீவிரமாக ஆலோசித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேட்டோ அமைப்பின் மூத்த அதிகாரி மற்றும் உறுப்பு நாடொன்றின் தூதுவர் ஆகியோரை மேற்கோள் காட்டி இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட அத்லாந்திக் ஒப்பந்த அமைப்பின் (NATO) சில நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், அனைத்து உறுப்பு நாடுகளினதும் ஏகோபித்த ஆதரவு (Unanimous Support) இதற்கு இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியில் அவசர மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் துருக்கியின் அங்காரா நகரில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் விசேட மாநாடொன்று நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் போதே ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்து இறுதி முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரில் இதுவரை நடுநிலை வகித்து வந்த நேட்டோ கூட்டணி, தற்போது இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட முற்படுவது அதன் மூலோபாயக் கொள்கையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றத்தைக் காட்டுகிறது.
முன்னதாக, போர் முழுமையாக நிறுத்தப்பட்டு, நேட்டோ அல்லாத ஏனைய நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டணியை உருவாக்க முடிந்தால் மட்டுமே தாங்கள் இதில் தலையிடுவோம் என உறுப்பு நாடுகள் பிடிவாதமாக இருந்தன.
எனினும், இந்த நீரிணை மூடப்பட்டதால் உலகளவில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து, பொருளாதார வளர்ச்சி கணிப்புகள் வீழ்ச்சியடைந்துள்ளதாலேயே நேட்டோ இந்த அவசர முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் மோதல் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களைத் தொடங்கியதை அடுத்து, உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை (1/5) கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முற்றாகத் தடுத்தது.
அப்போதிருந்தே இந்நீரிணையை மீண்டும் திறப்பதற்கு உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கோரிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் நிராகரித்து வந்தன.
இதனால் அதிருப்தியடைந்த வாஷிங்டன் நிர்வாகம், அண்மையில் ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படையினரைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது.
உறுப்பு நாடுகளின் அதிருப்தியும் இரகசிய ஆதரவும் ஸ்பெயின் போன்ற சில நேட்டோ உறுப்பு நாடுகள் இந்த ஈரான் மீதான போருக்குத் தங்களின் கடுமையான எதிர்ப்பை பகிரங்கமாக வெளியிட்டுள்ளன.
அமெரிக்கப் விமானங்கள் ஈரானைத் தாக்குவதற்காகத் தங்களின் வான்பரப்பைப் பயன்படுத்துவதையோ அல்லது இராணுவ முகாம்களைப் பயன்படுத்துவதையோ ஸ்பெயின் அரசு தடை செய்துள்ளது.
இருப்பினும், நேட்டோ கூட்டணியின் பெரும்பான்மையான நாடுகள், போக்குவரத்து மற்றும் தளவாடப் (Logistical) பணிகளுக்காகத் தங்களின் இராணுவ முகாம்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு இரகசியமாக அனுமதி வழங்கியுள்ளன.
மறுபுறம், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா (UK) தலைமையிலான நாடுகள், போர் முடிவடைந்தவுடன் ஹோர்முஸ் நீரிணையின் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூட்டுத் திட்டமொன்றை ஏற்கனவே தயாரித்து வருவதுடன், தங்களின் போர்க்கப்பல்களையும் அப்பிராந்தியத்தில் தயார் நிலையில் நிறுத்தியுள்ளன.
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையில் நேட்டோப் படைகள் தலையிட வேண்டும் என அமெரிக்கா இதுவரை உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுக்கவில்லை என புளூம்பெர்க் (Bloomberg) செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.