காசா பகுதிக்கு இஸ்ரேலினால் விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை உடைப்பதற்காக சர்வதேச மனிதநேய ஆர்வலர்களுடன் இணைந்து கடல்வழியாகப் பயணித்த போது, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கைச் செயற்பாட்டாளர் சமீரா மெஹ்பூப்தீன் தற்போது பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டு, இஸ்ரேலிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.
முற்றுகையை உடைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சர்வதேச செயற்பாட்டாளர்களை இஸ்ரேல் அரசு விடுவித்து, நாடு கடத்தத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலை தளமாகக் கொண்ட 'அதாலா' (Adalah) என்ற சட்ட ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.
இந்தச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் தெற்கு இஸ்ரேலிய நகரமான ஏலட்டிற்கு (Eilat) அருகில் உள்ள சிவில் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இலங்கை அரசாங்கம் கடும் அதிருப்தி முன்னதாக, இஸ்ரேலிய அமைச்சர் இட்டமார் பென்-க்வீர் (Itamar Ben-Gvir) தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ காட்சிகளில், கைது செய்யப்பட்ட சர்வதேச செயற்பாட்டாளர்கள் மனிதநேயமற்ற முறையில் நடத்தப்பட்டமை அம்பலமாகியிருந்தது.
இது குறித்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தனது “ஆழ்ந்த கவலையையும் கடுமையான அதிருப்தியையும்” வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சுடன் இராஜதந்திர ரீதியாகத் தொடர்புகொண்ட இலங்கை அரசு, சமீரா மெஹ்பூப்தீனை தூதரக அதிகாரிகள் நேரில் சந்திப்பதற்கான (Consular access) அனுமதியை கோரியதுடன், அவரது பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தி, அவரை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் தாயகம் திருப்புவதற்கான உத்தரவாதங்களையும் கோரியிருந்தது.
"வெளிநாடுகளில் உள்ள தனது பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் உள்ளது" என வெளிவிவகார அமைச்சு விடுத்திருந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இஸ்தான்புல் நோக்கிப் பயணம் சமீரா மெஹ்பூப்தீனுடன் தொடர்பில் உள்ள சர்வதேச வட்டாரங்களின்படி, அவர் தற்போது இஸ்ரேலின் ரமோன் (Ramon) விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.
அவர் விமானம் ஏறுவதற்கு முன்னர், இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அவரைச் சுருக்கமாகச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், அவரது உடல்நிலை குறித்து மட்டுமே ஒரேயொரு கேள்வியைக் கேட்பதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் அனுமதித்தனர். இதன்போது, "தான் நலமாக இருப்பதாக" சமீரா அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அவர் இஸ்தான்புல் நகரைச் சென்றடைந்ததும் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மனிதநேய ஆர்வலர்கள் இணைந்து காசா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு சவால் விடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்த இந்த "குளோபல் சுமுத் புளோட்டிலா" பயணத்தில் இணைந்துகொள்வதற்காக, சமீரா மெஹ்பூப்தீன் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.