கனடாவின் வரலாற்றிலேயே பாரிய தங்கக் கொள்ளை: எயார் கனடா ஊழியருக்கு போதைப்பொருள் மாஃபியாவுடன் நீண்டகாலத் தொடர்பு; W5 அதிரடி அம்பலப்படுத்தல்!

கனடாவின் வரலாற்றிலேயே பாரிய தங்கக் கொள்ளை: எயார் கனடா ஊழியருக்கு போதைப்பொருள் மாஃபியாவுடன் நீண்டகாலத் தொடர்பு; W5 அதிரடி அம்பலப்படுத்தல்!

டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் (Toronto Pearson International Airport) உயர் பாதுகாப்புப் பகுதிக்குள் இருந்து, கடந்த 2023 ஆம் ஆண்டு 22 மில்லியன் டாலர் பெறுமதியான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் உள்ள எயார் கனடா நிறுவன ஊழியர் ஒருவரைப் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த ஊழியர் இந்தத் தங்கக் கொள்ளைக்கு முன்னரே, பல வருடங்களாகப் பொலிஸாரின் இரகசியக் கண்காணிப்புப் வளையத்திற்குள் (Police Radar) இருந்தவர் என்பது W5 புலனாய்வுப் பிரிவினால் கண்டறியப்பட்டுள்ளது.

2008 முதலே பொலிஸ் வளையத்தில் சூத்திரதாரி இந்தத் தங்கக் கொள்ளைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு எயார் கனடா நிறுவன ஊழியர்களில் ஒருவரான பர்ம்பால் சித்து (Parmpal Sidhu) என்பவரின் பின்னணி குறித்தே இந்த விபரங்கள் அம்பலமாகியுள்ளன.

பொலிஸ் தரப்புத் தகவல்களின்படி, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு போதைப்பொருள் கடத்தல் விசாரணைகளின் போது பர்ம்பால் சித்துவின் பெயர் பொலிஸ் பதிவுகளில் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி, W5 ஊடகத்தினால் பிரத்தியேகமாகப் பெறப்பட்ட 2012ஆம் ஆண்டின் அதிதீவிர இரகசிய உளவுத்துறை ஆவணமொன்றின்படி (Intelligence Document), பர்ம்பால் சித்து சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலொன்றின் தலைவனாகச் செயற்பட்டுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பியர்சன் விமான நிலையத்தினூடாகப் பெருமளவிலான போதைப்பொருட்களைக் கடத்துவதற்கும், தங்களின் குற்றச் செயல்களை தங்குதடையின்றி முன்னெடுப்பதற்கும் "அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிறுவனங்களுக்குள்" தங்களின் ஆட்களை ஊடுருவச் செய்யும் பணியை இவரே முன்னின்று நடத்தியுள்ளார் என்பதும் அந்த ஆவணத்தில் அம்பலமாகியுள்ளது.

பாதுகாப்பு அனுமதிகள் (Security Clearances) பறிக்கப்படாதது ஏன்?

இந்த உளவுத்துறை அறிக்கை எயார் கனடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதா இல்லையா என்பதை W5 குழுவினால் உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளது.

எனினும், கடந்த 2023ஆம் ஆண்டு இந்த வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தங்கக் கொள்ளை நிகழும் வரை, பர்ம்பால் சித்து எவ்வித தடையுமின்றி தனது வேலையையும், விமான நிலையத்தின் உயர் பாதுகாப்புப் பகுதிகளுக்குள் செல்வதற்கான விசேட பாதுகாப்பு அனுமதியையும் (Security Clearance) தன்வசம் வைத்திருந்துள்ளார்.

அபாயகரமான குற்றச்சாட்டுகள் மற்றும் பொலிஸ் விசாரணைகள் நிலுவையில் இருந்த போதிலும், இவ்வாறான நபர்கள் எவ்வாறு கனடாவின் மிக பரபரப்பான விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டார்கள் என்ற பலத்த கேள்வியை இந்த அறிக்கை எழுப்பியுள்ளது.

மற்றுமொரு ஊழியரின் பின்னணி W5 இன் விசாரணையில் மற்றுமொரு எயார் கனடா ஊழியரான லெவி டேவிஸ் (Levi Davis) என்பவரின் விபரங்களும் அம்பலமாகியுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டு, கனடாவைச் சேர்ந்த அப்பாவி முதியவர் ஒருவர் பெர்முடா (Bermuda) நாட்டு விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

அவரது பைகளில் (Luggage) இருந்த அடையாள வில்லைகள் (Bag-tags) திட்டமிட்டு மாற்றப்பட்டதே இதற்குக் காரணம் எனப் பின்னர் தெரியவந்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த 'பேக்-டேக்' முறைகேட்டுடன் தொடர்புடைய எயார் கனடா லக்கேஜ் பிரிவில் கடமையாற்றிய லெவி டேவிஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது. எனினும், பின்னர் சில தெளிவற்ற காரணங்களால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டன.

ஆனால், இவர் மீதும் கடந்த 2010 ஆம் ஆண்டிலேயே பியர்சன் விமான நிலையத்தில் வைத்து கொக்கெய்ன் கடத்தல் மற்றும் பைகளின் அடையாள வில்லைகளை மாற்றியமைத்ததாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

அப்போதும் அவர் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல், அவரது வேலையும் பாதுகாப்பு அனுமதியும் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தமை கனடிய வான் போக்குவரத்து பாதுகாப்புத் துறையின் பாரிய பலவீனத்தைக் காட்டுகிறது.

கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றவியல் விசாரணைகளில் அரச பொலிஸாருக்கு (RCMP) உத்தியோகபூர்வமாக உதவும் மிக முக்கியமான பாதுகாப்புப் பிரிவுக்குள்ளேயே, போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய ஒரு நபர் உயர் அதிகாரியாகப் பணியாற்றியுள்ள அதிர்ச்சித் தகவல் W5 இன் தொடர் புலனாய்வில் அம்பலமாகியுள்ளது.

பொலிஸ் பிரிவுக்குள் இருந்த 'தலிவால்' விமான நிலையத்தின் மிக இரகசியமான பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய 'தலிவால்' (Dhaliwal) என்பவர் அண்மையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கொன்றில் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு இந்தப் பதவி வழங்கப்படுவதற்கு முன்னரே, இவரது பின்னணியில் பல ஆபத்தான அறிகுறிகள் (Red Flags) காணப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் கடன் பிரச்சினை காரணமாக தலிவால் கடத்தப்பட்டிருந்தமை, அவரது வீட்டில் நடந்த வன்முறைத் தாக்குதலின் போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை மற்றும் அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் போதைப்பொருள் மற்றும் நிதி மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தமை போன்ற அத்தனை விபரங்களும் அவர் பாதுகாப்புப் பிரிவில் வேலைக்குச் சேர்வதற்கு முன்னரே பொலிஸ் ஆவணங்களில் பதிவாகியிருந்தன.

எனினும், இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு அவருக்கு எவ்வாறு நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் உளவுப் பிரிவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது என்ற பலத்த கேள்வி எழுந்துள்ளது.

துப்பாக்கிக் குண்டுகளுடன் பிடிபட்ட 'மெக்லீன்' இதேபோன்ற மற்றுமொரு சம்பவமாக, பியர்சன் விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் ஊழியராகப் பணியாற்றிய டெவோன் லொயிட் மெக்லீன் (Devon Lloyd McLean) என்பவரின் விபரங்களும் வெளியாகியுள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தல் சதித்திட்டத்தில் குற்றவாளியாகக் காணப்பட்ட இவருக்கு, அதற்கு முன்னரே இருமுறை போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தன.

அத்துடன், விமான நிலைய பாதுகாப்புச் சோதனையின் போது வெற்றுத் தோட்டாக்கள் அடங்கிய 'மேகசின்' (Ammunition magazine) ஒன்றை மறைத்து எடுத்துச் செல்ல முயன்ற போதும் அவர் பிடிபட்டிருந்தார்.

இத்தகு பின்னணியைக் கொண்டிருந்த போதிலும், அவரது வேலையோ அல்லது விமான நிலைய பாதுகாப்பு அனுமதியோ (Security Clearance) பறிக்கப்படவில்லை.

"ஆயிரக்கணக்கானோர் மீது சந்தேகம்; ஆனாலும் அனுமதி வழங்கப்பட்டது"

விமான நிலைய ஊழியர்களைப் புலனாய்வு செய்து, ஆபத்தானவர்களின் பாதுகாப்பு அனுமதிகளை ரத்துச் செய்யுமாறு போக்குவரத்து அமைச்சுக்குப் பரிந்துரைக்கும் 'SIBS' (Security Intelligence Background Section) பிரிவின் ஓய்வுபெற்ற ஆர்.சி.எம்.பி (RCMP) அதிகாரி உலிஸஸ் பொடெய்ல்ஹோ (Ulisses Botelho) இது குறித்துப் பேசுகையில்:

"இந்த விபரங்கள் எனக்கு எவ்வித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. கடந்த 2007, 2008 ஆம் ஆண்டுகளில் நான் போதைப்பொருள் கடத்தல் பிரிவில் இருந்தபோது எங்களால் 'குற்றவாளிகள்' என அடையாளப்படுத்தப்பட்ட இலக்குகள் (Targets), இன்றும் பியர்சன் விமான நிலையத்தின் தடைசெய்யப்பட்ட உயர் பாதுகாப்புப் பகுதிகளுக்குள் விசேட அனுமதி அட்டைகளுடன் உலா வருவதை நான் கண்டேன். உள்ளக ஊழியர்களின் உதவி இல்லாமல் சர்வதேச கடத்தல் கும்பல்களால் விமான நிலையங்களுக்குள் இயங்கவே முடியாது."

போக்குவரத்து அமைச்சின் அதிர்ச்சித் தரவுகள் (Exclusive Data)

கனடாவின் போக்குவரத்து அமைச்சிடமிருந்து (Transport Canada) W5 திரட்டிய பிரத்தியேகத் தரவுகளின்படி, கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் கனடாவின் நான்கு பிரதான விமான நிலையங்களில் 125,000 க்கும் அதிகமான ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் திடுக்கிடும் விடயம் என்னவெனில், அவர்களில் 7,500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏதேனும் ஒரு கிரிமினல் பின்னணி அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல் கொண்டவர்கள் என உளவுத்துறையால் அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் (Flagged), அவர்களுக்கும் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் செல்வதற்கான அனுமதிகள் தங்குதடையின்றி வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து கனடா போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள விளக்கத்தில், பழைய குற்றப் பதிவுகள் அல்லது போக்குவரத்து விதிமீறல்கள் போன்ற சிறிய காரணங்களுக்காகவும் ஊழியர்கள் அடையாளப்படுத்தப்படலாம் என்பதால், அவ்வாறான 'நெகட்டிவ்' விபரங்கள் உள்ள அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இந்த 7,500 பேரில் சர்வதேச கடத்தல் கும்பல்களுக்கு நேரடியாக உதவும் 'அதி பயங்கர' (Mission Critical) நபர்கள் எத்தனை பேர் என்ற கேள்விக்கு அரசாங்கத்திடமிருந்து தமக்கு நேரடிப் பதில் எதுவும் கிடைக்கவில்லை என ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரி பொடெய்ல்ஹோ கவலை வெளியிட்டுள்ளார்.

கனடிய விமான நிலையங்களின் இந்த உள்ளக ஊழல் பிரச்சினை மிகவும் பிரம்மாண்டமானது (Huge) எனவும் அவர் எச்சரித்துள்ளார்.