அமெரிக்காவின் போர்நிறுத்த அழுத்தத்தால் கொதிப்படைந்தது இஸ்ரேல்; ஈரான் மீது மீண்டும் போரைத் தொடங்க நெதன்யாகு அவசரம்!

அமெரிக்காவின் போர்நிறுத்த அழுத்தத்தால் கொதிப்படைந்தது இஸ்ரேல்; ஈரான் மீது மீண்டும் போரைத் தொடங்க நெதன்யாகு அவசரம்!

ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நகர்வுகளில் இருந்து அமெரிக்கா பின்வாங்கி, அமைதி ஒப்பந்தமொன்றை நோக்கி நகரும் வேளையில், இஸ்ரேலிய அரசியல் தலைமைகள் ஈரான் மீது மீண்டும் ஒரு பாரிய போரைத் தொடுப்பதற்குத் தீவிரமாகத் துடித்துக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் வலதுசாரி 'சனல் 14' (Channel 14) ஊடகத்தின் செய்தி வழங்குனரான ஷிமோன் ரிக்லின், ஈரானின் யுரேனியம் களஞ்சியகம் அமைந்துள்ளதாகக் கூறப்படும் இரகசிய இலக்குகள் உட்பட, தெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்தவிருக்கும் புதிய தாக்குதல் திட்டங்களை நேரலையில் தவறுதலாக அம்பலப்படுத்தியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் கண்டனங்களை அடுத்து, அது ஒரு கற்பனையான கருத்து என அவர் மழுப்பிய போதிலும், இஸ்ரேல் போருக்குத் தயாராகி வருவதை இந்நாடகம் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

"தலைமுடி கருகும் அளவுக்கு" கோபமடைந்த நெதன்யாகு!

இஸ்ரேலிய ஊடகங்களின்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமையில் போர்க் அமைச்சரவையின் (Security Cabinet) விசேட கூட்டம் அண்மையில் கூட்டப்பட்டு, ஈரான் மீதான போரை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

பில்லியன் கணக்கான டாலர் பெறுமதியான இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஆயுதங்கள் ஈரான் மீது ஏவப்பட்ட போதிலும், தெஹ்ரானின் ஆட்சி அதிகாரத்தையோ அல்லது அதன் பலத்தையோ வீழ்த்த முடியாமல் போனதே இஸ்ரேலின் இந்த அவசரத்திற்குக் காரணமாகும்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே நேற்று இரவு இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது, இஸ்ரேலின் பாதுகாப்பு கவலைகளைப் பொருட்படுத்தாமல் போர்நிறுத்தத்தை (Truce) நோக்கியே வாஷிங்டன் நகர்வதாக ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நெதன்யாகு, "தலைமுடி கருகும் அளவுக்கு" (Hair on fire) கடுமையான கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் காணப்பட்டதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி அமெரிக்காவின் ஏற்பாட்டில் கொண்டுவரப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையானது, ஈரானை தங்களின் முதன்மை எதிரியாகப் பார்க்கும் இஸ்ரேலிய பொதுமக்கள் மத்தியில் நெதன்யாகுவின் செல்வாக்கை பெருமளவு சரித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த இயலாமையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் மற்றும் முன்னாள் பிரதமர் நப்தாலி பெனட் ஆகியோர் நெதன்யாகு மீது கடுமையான அரசியல் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கையைப் போல இஸ்ரேலிலும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நெதன்யாகு போரை மீண்டும் தொடங்க விரும்புவதற்கு மூன்று முக்கிய காரணங்களை அரசியல் ஆய்வாளர் அலோன் பின்காஸ் சுட்டிக்காட்டியுள்ளார்:

ஒக்டோபர் 7 தோல்வியை மறைத்தல்: 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் உளவுத்துறை தோல்விகளிலிருந்து தப்பிப்பதற்கும், மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை மீட்பதற்கும் நெதன்யாகுவிற்கு ஈரானுக்கு எதிரான ஒரு 'மாபெரும் மூலோபாய வெற்றி' அவசியமாகிறது.

தற்போதைய போர்நிறுத்தத்தின் மூலம் இஸ்ரேல் எதனையும் சாதிக்கவில்லை என்றும், ஈரானின் அணுசக்தித் திட்டம் இன்னமும் முடக்கப்படவில்லை என்றும் இஸ்ரேலிய அரசியல் பரப்பில் பரவலான அதிருப்தி நிலவுகிறது.

வரவிருக்கும் ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்க, ஈரானை மண்டியிடச் செய்த பெருமையை நெதன்யாகுவிற்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை நெருக்கடியும் அமெரிக்காவின் தயக்கமும்

ஈரான் மீதான போரின் விளைவாக, உலகளாவிய எண்ணெய் சந்தையைத் தீர்மானிக்கும் 'ஹோர்முஸ் நீரிணையை' (Strait of Hormuz) ஈரான் முற்றாக மூடியதுடன், பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

ஈரானின் இந்த அதிரடித் தற்காப்பு உத்தியானது, உலகப் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளதுடன், மீண்டும் ஒரு நீண்டகாலப் போருக்குள் நுழைவதற்கான அமெரிக்காவின் ஆர்வத்தைக் குறைத்துள்ளது.

"அமெரிக்கா பச்சைக்கொடி காட்டினால், ஈரானை கற்காலத்திற்கு குண்டுவீசி அனுப்புவதற்கு இஸ்ரேல் தயாராக உள்ளது" என பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மிரட்டல் விடுத்துள்ள போதிலும், அமெரிக்காவின் அனுமதியின்றி நெதன்யாகுவினால் தனித்துச் செயல்பட முடியாது என அரசியல் ஆலோசகர்கள் குறிப்பிடுகின்றனர்.

நெதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "நான் என்ன செய்யச் சொல்கிறேனோ, அதை மட்டுமே நெதன்யாகு செய்வார்" எனத் தெரிவித்துள்ளமை, இஸ்ரேலின் போர்த் திட்டங்களுக்கான வரம்புகளை வாஷிங்டன் ஏற்கனவே தீர்மானித்துவிட்டதை உணர்த்துகிறது.