கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (DR Congo) கிழக்குப் பகுதியில் எபோலா வைரஸ் பரவலின் மையப்பகுதியாகக் காணப்படும் இடத்திலுள்ள பொது மருத்துவமனை ஒன்றின் மீது, கோபமடைந்த உள்ளூர் மக்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் எபோலா தனிமைப்படுத்தல் கூடாரங்கள் (Isolation Tents) முற்றாகத் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
எபோலா தொற்றினால் உயிரிழந்ததாகக் கருதப்படும் ஒரு இளைஞனின் உடலை, இறுதிச் சடங்கிற்காக உறவினர்களிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்தமையே இந்த வன்முறை வெடிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
அதிர்ச்சி தரும் வன்முறை நாடகம் இது குறித்து இத்தூரி (Ituri) மாகாணத்தின் புனியா (Bunia) நகருக்கு அருகில் அமைந்துள்ள ரவாம்பரா பொது மருத்துவமனையில் (Rwampara General Hospital) நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் அரசியல்வாதி லுக் மலெம்பே (Luc Malembe) ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்:
"கோபமடைந்த மக்கள் மருத்துவமனையை நோக்கி கற்கள் மற்றும் பொருட்களை வீசித் தாக்கத் தொடங்கினர். அவர்கள் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைத்திருந்த தற்காலிக கூடாரங்களுக்கும் தீ வைத்தனர். அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த எபோலா சடலம் ஒன்றும் இந்தக் கலவரத்தில் தீயில் கருகியது."
நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், கலவரத்தைக் கலைக்க பொலிஸார் வான்நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வன்முறையின் போது கற்கள் வீசப்பட்டதில் சுகாதார ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருதி அங்கு இராணுவப் பாதுகாப்பு (Military Protection) பலப்படுத்தப்பட்டுள்ளது.
"எபோலா என்பது ஒரு கட்டுக்கதை" – மக்களிடம் நிலவும் அறியாமை
உயிரிழந்த இளைஞன் உள்ளூர் மட்டத்திலான ஒரு பிரபல கால்பந்து வீரர் (Footballer) என்பதால் அவரது மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவரது தாயார் தனது மகன் எபோலாவினால் இறக்கவில்லை என்றும், டைபாய்டு (Typhoid) காய்ச்சலினாலேயே உயிரிழந்தார் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.
இப்பகுதியில் உள்ள கணிசமான மக்கள் எபோலா என்ற பயங்கரவாத வைரஸ் ஒன்று இருப்பதை இன்னமும் நம்ப மறுப்பதே இவ்வாறான வன்முறைகளுக்குக் காரணம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
"தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்கள் எபோலா என்பது வெளிநாட்டவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை என நினைக்கிறார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் (NGOs) மருத்துவமனைகளும் பணம் சம்பாதிப்பதற்காகவே இந்த நோயை உருவாக்குவதாக அவர்கள் நம்புகின்றனர். இது மிகப்பெரிய ஒரு முட்டாள்தனமான சோகமாகும்" என அரசியல்வாதி மலெம்பே கவலை வெளியிட்டுள்ளார்.
தப்பிய நோயாளிகள் மற்றும் தற்போதைய கள நிலவரம்:
தீவைக்கப்பட்ட கூடாரங்களுக்குள் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் கலவரத்தின் போது சிதறியோடிய போதிலும், பின்னர் 'அலிமா' (Alima) மருத்துவ தொண்டு நிறுவனத்தினால் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனைக்குள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த எபோலா பரவல் காரணமாக கொங்கோவின் தேசிய கால்பந்து அணி தங்களின் உலகக் கிண்ணத்திற்கு முன்னரான பயிற்சி முகாம்களைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) படி 139 மரணங்கள் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்ட போதிலும், கொங்கோவின் சுகாதார அமைச்சர் சாமுவேல் ரோஜர் காம்பா (Samuel Roger Kamba) நாட்டின் உத்தியோகபூர்வ ஊடகத்தில் பேசுகையில், இதுவரை எபோலா தொற்றினால் 159 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசி இல்லாத புதிய 'பண்டிபுகியோ' (Bundibugyo) வீரியம் தற்போது கொங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸானது 'பண்டிபுகியோ' (Bundibugyo) எனப்படும் மிகவும் அரிய வகை திரிபாகும்.
இதற்கு எதிராக தற்போதைக்கு எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ (Vaccine) அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ உலகத்தில் இல்லை என சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக அண்டை நாடான உகாண்டா (Uganda) உடனடியாக கொங்கோவுடனான பேருந்து, படகு மற்றும் அனைத்துப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளையும் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
இதேவேளை, கிழக்கு கொங்கோவின் பெரும் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'M23' என்ற கிளர்ச்சியாளர் குழுவும், தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான தெற்கு கிவு (South Kivu) மாகாணத்திலும் முதலாவது எபோலா மரணம் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளமை சர்வதேச ரீதியாகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.