அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ், நாட்டின் மிக சக்திவாய்ந்த உளவுத்துறைப் பிரிவுகளின் தலைமைப் பதவியை வகித்து வந்த தேசிய உளவுத்துறைப் பணிப்பாளர் துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிரடியாக அறிவித்துள்ளார்.
தனது கணவருக்கு அண்மையில் எலும்புப் புற்றுநோய் (Bone Cancer) இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்தே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதற்காக அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உருகிய இராஜினாமா கடிதம் இது குறித்து ஜனாதிபதி ட்ரம்பிற்கு அவர் அனுப்பியுள்ள இராஜினாமா கடிதத்தில்:
"என் வாழ்வின் ஒவ்வொரு சவாலான காலகட்டத்திலும் எனது கணவரின் அன்பும் பலமுமே என்னைத் தாங்கிப் பிடித்தன. தற்போது அவர் தனது வாழ்வின் மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொண்டுள்ள வேளையில், அதிக பொறுப்புகளும் நேர விரயமும் கொண்ட இந்த உயர் பதவியில் நீடித்துக்கொண்டு, அவரைத் தனியாக அந்தப் போராட்டத்தை எதிர்கொள்ளுமாறு என்னால் ஒருபோதும் விட்டுவிட முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
துளசி கப்பார்ட்டின் இந்த முடிவை அடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரப், "துளசி நாட்டின் பாதுகாப்பிற்காக மிகச் சிறந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அவரது சேவையை நாங்கள் நிச்சயமாக மிஸ் செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
துளசி கப்பார்ட்டின் இந்த இராஜினாமாவானது வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.
அதன் பின்னர், உளவுத்துறையின் முதன்மை பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஆரோன் லூகாஸ் (Aaron Lukas) தற்காலிகப் பதில் பணிப்பாளராகப் பொறுப்பேற்பார் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 2024 அதிபர் தேர்தலின் போது ட்ரம்பின் தீவிர ஆதரவாளராகச் செயற்பட்ட துளசி கப்பார்ட், ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதை அடுத்து, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் மிக உயரிய உளவுத்துறைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
இருப்பினும், சமீபகாலமாக ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல்கள், கியூபா மீதான அரசியல் அழுத்தங்கள் மற்றும் வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்ட அதிரடி சம்பவங்களின் போது, நாட்டின் உளவுத்துறைத் தலைவரான துளசி கப்பார்ட் பொதுவெளிக்கு வராமல் பெருமளவு ஒதுங்கியிருந்தமை சர்வதேச அரங்கில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வந்தது.
டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியமைத்த குறுகிய காலப்பகுதிக்குள் அவரது அமைச்சரவையிலிருந்து (Cabinet) வெளியேறும் நான்காவது முக்கிய உயர் அதிகாரி துளசி கப்பார்ட் ஆவார்.
கடந்த ஏப்ரல் மாதம் தொழிலாளர் துறைச் செயலாளர் லோரி சாவேஸ்-டெரெமர் (Lori Chavez-DeRemer) தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அதற்கு முன்னர், உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம் (Kristi Noem) மற்றும் அற்றோர்னி ஜெனரல் பாம் போண்டி (Pam Bondi) ஆகியோரும் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகியிருந்தனர்.
தற்போது துளசி கப்பார்ட்டின் இந்த திடீர் விலகலானது, சர்வதேச ரீதியாகப் பல போர் பதற்றங்களை எதிர்கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகை நிர்வாகத்திற்குப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ரீதியாக மற்றுமொரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தேசிய உளவுத்துறைப் பணிப்பாளர் துளசி கப்பார்ட்டின் இராஜினாமா குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரப், "தன் கணவர் எதிர்கொண்டுள்ள கடினமான போராட்டத்தில் அவருடன் இருந்து, அவரை மீண்டும் பழைய ஆரோக்கிய நிலைக்குக் கொண்டுவர துளசி விரும்புவது முற்றிலும் நியாயமானது. அவர் விரைவில் முன்பை விடவும் அதிக ஆரோக்கியத்துடன் மீண்டு வருவார் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
துளசி கப்பார்ட்டின் இந்த இராஜினாமாவிற்கு அவரது கணவரின் புற்றுநோய் பாதிப்பு பிரதான காரணமாகக் கூறப்பட்ட போதிலும், சமீபகாலமாக ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவக் கொள்கைகளில் அவருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் நிலவி வந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா தலையிடுவதை கடுமையாக எதிர்த்து வந்த (Anti-interventionalist) துளசி கப்பார்ட்டிற்கு, ஜனாதிபதி ட்ரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த எடுத்த முடிவு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களை துளசி கப்பார்ட் பகிரங்கமாக அங்கீகரிக்கவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் குழு விசாரணையின் (Congressional Hearing) போது, இந்தப் போரினால் ஏற்படக்கூடிய உலகளாவிய மோசமான விளைவுகள் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் முன்கூட்டியே அறிந்திருந்ததா எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாகப் பதிலளிக்காமல் தவிர்த்திருந்தார்.
ஈரானின் அணு ஆயுத உற்பத்தித் திறன் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கைகளுக்கும், அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் திரட்டிய தரவுகளுக்கும் இடையே பாரிய முரண்பாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சுமத்தியிருந்தனர். இது குறித்தும் துளசி நாடாளுமன்றத்தில் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டார்.
"ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிக்கவில்லை" என உளவுத்துறைத் தலைவியான துளசி கப்பார்ட் நாடாளுமன்றத்தில் சாட்சியமளித்திருந்த போதிலும், கடந்த ஆண்டு செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ட்ரப், "அவர் (துளசி) என்ன சொன்னார் என்பது எனக்குக் கவலையில்லை. ஈரான் அணு ஆயுதத்தை நெருங்கிவிட்டது என்றே நான் நினைக்கிறேன்" என அவரது கருத்தை பகிரங்கமாக நிராகரித்திருந்தார்.
இதேவேளை, ஈரான் மீதான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து துளசி கப்பார்ட்டின் முதன்மை உதவியாளரும், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னாள் இயக்குநருமான ஜோ கென்ட் (Joe Kent) இரண்டு மாதங்களுக்கு முன்னர் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு இராணுவ வீராங்கனையாக ஈராக் போரில் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய துளசி கப்பார்ட், அமெரிக்க அரசியல் வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்தவராவார்:
கடந்த 2002ஆம் ஆண்டு, தனது 21 ஆவது வயதில் ஹவாய் மாநில நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், அந்த மாநில வரலாற்றிலேயே மிக இளம் வயதில் எம்.எல்.ஏ ஆனவர் என்ற பெருமையைப் பெற்றார்.
2013 முதல் 2021 வரை ஜனநாயகக் கட்சியின் (Democrats) சார்பில் அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபை உறுப்பினராகப் பணியாற்றிய அவர், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்வான முதலாவது 'இந்து' (First Hindu) மதப் பிரஜை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
2020 அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அவர், 2022 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகினார். தனது பழைய கட்சியை "போர் வெறியர்களின் சுயநலக் கூட்டம்" எனக் கடுமையாகச் சாடினார்.
பின்னர், பாக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகத்தின் அரசியல் விமர்சகராகப் பணியாற்றிய அவர், ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக மாறி குடியரசுக் கட்சியில் (Republicans) இணைந்தார்.
2024 தேர்தலில் ட்ரம்பிற்காகத் தீவிரப் பிரசாரம் செய்ததுடன், ட்ரம்பின் புதிய அரசாங்கத்தை அமைக்கும் இடைக்காலக் குழுவிலும் (Transition Team) முக்கிய பங்காற்றினார்.
அமெரிக்காவின் 16 க்கும் மேற்பட்ட உளவுத்துறை அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஜனாதிபதிக்கு நேரடி ஆலோசனை வழங்கும் மிக உன்னதமான தேசிய உளவுத்துறைப் பணிப்பாளர் பதவிக்கு ட்ரம்பினால் துளசி நியமிக்கப்பட்டார்.
அவரது குறுகிய கால தலைமையின் கீழ், அமெரிக்க உளவுத்துறையின் கட்டமைப்பு பெருமளவு சுருக்கப்பட்டது. கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்த உளவுத்துறை அமைப்பு "தேவையற்ற ஆட்களுடனும், செயல்திறனற்ற முறையிலும்" வீங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட துளசி கப்பார்ட், கடந்த ஆண்டு அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை 50% இனால் அதிரடியாகக் குறைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.