கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் கொடிய 'பண்டிபுகியோ' (Bundibugyo) வகை எபோலா வைரஸ் தொற்றின் தீவிரம் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளதால், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டத்தை 'அதிகம்' என்ற நிலையிலிருந்து 'மிகவும் அதிகம்' (Very High) என்ற உச்சக்கட்ட நிலைக்கு உலக சுகாதார அமைப்பு உத்தியோகபூர்வமாக உயர்த்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் தலைமைப் பணிப்பாளர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus) இந்த விபரங்களை வெளியிட்டார்.
ஆப்பிரிக்காவின் ஏனைய பிராந்திய நாடுகளுக்கு இந்த நோயின் பரவல் ஆபத்து 'அதிகம்' (High) என மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், சர்வதேச ரீதியாக (Globally) இதன் அச்சுறுத்தல் மட்டம் இன்னமும் 'குறைவாகவே' (Low) காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது கொங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸானது மிகவும் அரிய வகை திரிபாகும். இதற்கு எதிராக தற்போதைக்கு உலகத்தில் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சையோ கிடையாது என்பதுடன், இந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (1/3) மரணமடையும் சாத்தியம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
177 பேர் உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது. 750க்கும் மேற்பட்டோர் தொற்றறுகுறியுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் 82 பேருக்கு தொற்று இருப்பது ஆய்வக சோதனைகளில் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 7 மரணங்கள் உத்தியோகபூர்வமாகப் பதிவாகியுள்ளன.
அண்டை நாடான உகண்டாவிலும் (Uganda) கொங்கோவிலிருந்து பயணித்த இருவருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அங்கு ஒரு மரணம் பதிவாகியுள்ளது. எனினும், அங்கு நிலைமை தற்போதைக்கு ஸ்திரமாக (Stable) உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அவசர தடுப்பூசி முயற்சி
இந்த ஆபத்தான 'பண்டிபுகியோ' எபோலா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக (Oxford University) விஞ்ஞானிகள் புதிய தடுப்பூசி ஒன்றை அவசரமாக உருவாக்கி வருகின்றனர்.
அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தொழில்நுட்பம்:
உலகப் புகழ்பெற்ற கோவிட் தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட அதே 'அஸ்ட்ராஜெனெகா' தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த எபோலா தடுப்பூசியும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
விலங்குப் பரிசோதனை:
இதற்கான முதற்கட்ட விலங்குப் பரிசோதனைகள் (Animal testing) தற்போது ஒக்ஸ்போர்ட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் (Clinical trials) இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பாரிய உற்பத்தி:
இந்தத் தடுப்பூசி வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டதும், உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான இந்தியாவின் சீரம் நிறுவனம் (Serum Institute of India) இதனைப் பெருமளவில் (Mass Production) உற்பத்தி செய்வதற்குத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எபோலா எங்களைச் சித்திரவதை செய்கிறது"
கிழக்கு கொங்கோவில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் கிளர்ச்சியாளர்களின் வன்முறைகள் காரணமாக எபோலா தடுப்புப் பணிகளை முன்னெடுப்பதில் சர்வதேச சுகாதாரப் பணியாளர்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் சில எபோலா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
அண்மையில் ரவாம்பரா பொது மருத்துவமனையில் உயிரிழந்த எபோலா நோயாளி ஒருவரின் சடலத்தைத் தொற்றுக் பரவல் அபாயம் காரணமாக உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்ததால், கோபமடைந்த உள்ளூர் மக்கள் மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தல் கூடாரங்களுக்குத் தீ வைத்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
"எபோலா எங்களைச் சித்திரவதை செய்கிறது. மக்கள் மிக வேகமாக இறந்து கொண்டிருக்கிறார்கள். எங்களை பயம் உலுக்கிக் கொண்டிருக்கிறது" என ரவாம்பரா பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சடலங்கள் மூலம் இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவக்கூடும் என்பதால், உயிரிழப்பவர்களின் உடல்களை இராணுவப் பாதுகாப்பிற்கு மத்தியில் உத்தியோகபூர்வமாக அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.