தேசிய அரசாங்கத்தை நோக்கி நகர்கிறதா திசைகாட்டி?

தேசிய அரசாங்கத்தை நோக்கி நகர்கிறதா திசைகாட்டி?

இலங்கை வரலாற்றில் அண்மைய காலத்தில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் தாக்கம், நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் இன்னும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்தச் சூழ்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் அதன் எதிர்காலம் குறித்து, அரசியல் அரங்கில் பாரிய விவாதங்கள் எழுந்துள்ளன.

தற்போது எதிர்நோக்கியுள்ள நடைமுறைச் சவால்களிலிருந்து மீள்வதற்காயின், பாரம்பரிய அரசியல் கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட ஒரு 'தேசிய அரசாங்கம்' அல்லது பரந்த கூட்டு ஆட்சி முறையை நோக்கி நகர வேண்டியதன் அவசியம் குறித்து பல தரப்பினரினதும் அவதானம் திரும்பியுள்ளது.

நாட்டின் கொடுப்பனவு நிலுவை நெருக்கடி (Balance of Payments Crisis) உள்ளிட்ட கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில், தனி ஒரு கட்சியாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் கொள்கையாலோ மாத்திரம் நாட்டை ஆள்வது கடினம் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதன் காரணமாக, கடந்த தேர்தல் காலங்களில் மேடைகளில் முழங்கப்பட்ட "76 வருட சாபம்" அல்லது "களைகளைப் பிடுங்கி மலர்ச்செடிகளை நடுவோம்" போன்ற கவர்ச்சிகரமான அரசியல் கோஷங்களை விடுத்து, எதிர்க்கட்சிகள் மற்றும் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு புதிய நிர்வாகக் கட்டமைப்பை நோக்கி நகர ஜனாதிபதி தயாராகி வருவதாகத் தெரியவருகிறது.

இது குறித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய அரசியல்வாதியான சுஜீவ சேனசிங்க, அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, இன்னும் சில மாதங்களில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டிய நிலை தற்போதைய ஆட்சிக்கு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சரியான பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யப்படாவிட்டால், அமெரிக்க டொலரின் மதிப்பு 360 ரூபாய் வரை உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். எனினும், தற்போதைய பொருளாதாரப் போக்கின்படி டொலரின் மதிப்பு இதைவிடவும் அதிகரிக்கும் அபாயமே தென்படுகிறது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அரசியலமைப்பின்படி பரந்த அதிகாரங்கள் உள்ளபோதிலும், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பாரம்பரிய இடதுசாரிக் கொள்கைவாதிகளுடன் இணைந்துப் பயணிப்பதில் கடுமையான உள்வீட்டு முரண்பாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினரின் தீவிர இடதுசாரிக் கொள்கைப்பிடிப்பும், 'பெலவத்தை' தலைமையகத்தை மையமாகக் கொண்ட பாரம்பரிய சிந்தனையும், தற்போதைய நடைமுறைப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பெரும் தடையாக மாறியுள்ளது.

சமீபத்தில் கட்சி அலுவலகத்தில் வைத்து கோபமடைந்த ஒரு தொண்டரால் டில்வின் சில்வா தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தியை, கட்சி முற்றாக மறுத்திருந்தது. எனினும், அதன் பின்னர் அரசாங்க ஊடகங்கள் வாயிலாக அவருக்குத் தனது கருத்துக்களைக் கூற அளவுக்கு அதிகமான நேரமும் இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது.

அரச ஊடகங்கள் தற்போது பெலவத்தையிலிருந்து இயக்கப்படுவதாகக் கூறப்படும் பின்னணியில், இந்த அளவுக்கு அதிகமான ஊடக வெளிச்சமானது கட்சிக்குள் ஏதோ ஒரு பாரிய முரண்பாடு இருப்பதை வெளிப்படையாகக் காட்டுகின்றது.

மறுபுறம், உள்ளூராட்சிமன்றங்கள் உள்ளிட்ட மாகாண மட்ட நிர்வாகச் சீர்கேடுகளைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் தற்போது சற்று நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளதாக அடிமட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியின் சில செயற்பாட்டாளர்கள் இதனை 'மக்கள்மயமாக்கல்' எனக் கூறினாலும், வீழ்ந்துவிடாமல் தப்பிப்பிழைப்பதற்கான ஒரு முயற்சியாகவே ஏனையோர் இதனைக் கருதுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊழியர் அணியில் இருந்த அனுபவம்வாய்ந்த அதிகாரிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களைப் புதிய நிர்வாகத்தில் இணைத்துக்கொள்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் ஊடாகத் தொலைபேசி உரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தற்போது கடுமையான நட்டத்தில் இயங்கிவரும் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர் பதவிகளுக்குக் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, எதிர்க்கட்சியில் உள்ள துறைசார் வல்லுநர்களை நியமிப்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

ஆரம்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவை நிராகரித்த ஜனாதிபதி, தற்போது மிகவும் நடைமுறைச் சாத்தியமான (Pragmatic) ஒரு பாதையை நோக்கி நகர்கிறார். நாட்டின் முன்னணி வர்த்தகர்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலர், எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைப்பதற்கான ஒரு 'மத்தியஸ்த' முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டைப் பொருளாதாரப் பள்ளத்திலிருந்து மீட்பது தங்களின் பொறுப்பு என வர்த்தக சமூகம் நம்புகிறது.

தற்போதைய நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக 'புதிய தாராளமயப் பொருளாதார உத்திகளை' (Neo-liberal Economic Strategies) நோக்கி நகர வேண்டும் என்ற ஆலோசனைகளுக்கு ஜனாதிபதி சாதகமான பதிலளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய வங்கி ஆளுநர்கூட எதிர்கால நிதி ஸ்திரத்தன்மை குறித்து நிச்சயமற்ற தன்மையை வெளியிட்டுள்ள நிலையில், வர்த்தகச் சமூகத்தின் வழிகாட்டலின் கீழ் முடிவுகளை எடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தியின் முற்போக்குக் குழுவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஜனாதிபதியின் இந்த நெகிழ்வுப் போக்கானது ஜே.வி.பி கட்சிக்குள் பாரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் "3%" என அழைக்கப்படும் பாரம்பரிய தீவிர இடதுசாரி சிந்தனையாளர்கள், எதிர்க்கட்சியினரையும் "முதலாளித்துவ வர்த்தகர்களையும்" ஆட்சியில் பங்குதாரர்களாக்குவதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இந்தத் தலையீட்டை அவர்கள் "நரிகளுக்குப் பசியை ஆற்ற வழிவிடுவது" போன்ற ஆபத்தான செயலாகவும், தங்களின் சமூகசமத்துவக் 'கற்புடைமை' சீர்குலைந்துவிடும் என்றும் பயப்படுகின்றனர்.

உலக அரசியல் மற்றும் பொருளாதார யதார்த்தங்களை முற்றாக நிராகரித்து, இடதுசாரிக் கொள்கைகளில் மாத்திரம் பிடிவாதமாக இருக்க முயலும் ஜே.வி.பி தலைமைகளின் இந்த முரட்டுத்தனமான போக்கினால், கட்சி இரண்டாகப் பிளவடையும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய அரசியல் பயணமானது, தீவிர இடதுசாரிக் கொள்கைவாதம் (Left-wing Ideology) மற்றும் உலகளாவிய பொருளாதார நடைமுறைவாதம் (Global Economic Pragmatism) ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஓர் ஊசலாட்டமாகவே தெரிகிறது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது கட்சியின் பாரம்பரிய எல்லைகளைத் தாண்டி, ஒரு பரந்த தேசியக் கூட்டாண்மையை நோக்கி நகரப் போகிறாரா அல்லது பழைய அரசியல் கூட்டுக்குள்ளேயே முடங்கிவிடப் போகிறாரா என்பதை வரவிருக்கும் மாதங்கள் தீர்மானிக்கும்.

அது, கட்சியின் எதிர்காலத்தை மட்டுமன்றி, ஒட்டுமொத்த இலங்கையின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.