இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையானது, வெறும் ஒரு சாதாரண நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி மட்டுமல்ல.
அது பல தசாப்தங்களாக நாட்டில் வேரூன்றியிருந்த ஊழல் நிறைந்த பிரபு அரசியல் (Elite Politics), பொருளாதார ஸ்திரமின்மை, குடும்ப ஆட்சி மற்றும் தோல்வியடைந்த அரச நிர்வாகக் கட்டமைப்பு ஆகியவற்றுககு எதிராக ஒட்டுமொத்த சமுதாயமும் வெளிப்படுத்திய கூட்டு நிராகரிப்பின் முடிவாகும்.
எனவே, இந்த மக்கள் ஆணையை வெறும் ஓர் ஆட்சி மாற்றமாகப் பார்க்காமல், ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையுமே சீர்த்திருத்துவதற்கான (State Reformation) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பமாகப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத் திருப்புமுனைகள் எப்போதுமே புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுடனேயே ஒட்டிப் பிறந்திருக்கின்றன என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது.
1972இன் முதலாவது குடியரசு அரசியலமைப்பு: சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் காலனித்துவக் கறைகளில் இருந்து விடுபட்டு, ஓர் உள்நாட்டு அரசை உருவாக்கும் நோக்கில் இது கொண்டுவரப்பட்டது.
இது சிங்கள பௌத்த மேலாதிக்கம் மற்றும் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த போதிலும், இதன் பொருளாதாரத் தத்துவம் 'அரசு சார்ந்த சோசலிச மற்றும் கலப்புப் பொருளாதாரமாக' இருந்தது. அங்கு சந்தை சக்திகளுக்கு அரசு அடிமையாக இருக்கவில்லை.
1978இன் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு: ஜே.ஆர். ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அரசமைப்பு, புதிய தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கான (Neo-liberal Economic Reforms) அரசியல் தளமாக அமைந்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் ஊடாக (Executive Presidency) அதிகாரம் ஒரு புள்ளியில் குவிக்கப்பட்டு, நாடு முதலாளித்துவப் பாதையை நோக்கித் திருப்பப்பட்டது.
இது திறந்த பொருளாதாரம் மற்றும் உலகளாவிய இணைப்பை வேகப்படுத்திய போதிலும், ஜனநாயகத்தின் சமநிலையைச் சீர்குலைத்ததுடன், இன முரண்பாட்டையும் தீவிரப்படுத்தியது.
பொருளாதார முறையொன்றை மாற்றுவதற்கு வலுவான அரசியலமைப்பு அடித்தளம் அவசியம் என்பதை இந்த வரலாறு நமக்குக் கற்றுத் தருகிறது.
இன்று இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அவிசுவாசம், இனப்பிரச்சினை மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியா-சீனா-அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் பூகோள அரசியல் போட்டி (Geopolitical Rivalry) ஆகிய அனைத்துக்கும் முகம் கொடுக்க ஒரு புதிய 'அரசியல் உடன்படிக்கை' (New Social Contract) தேவையாகவுள்ளது.
இன்றைய உலகம் அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்கக் கீழ் (Unipolar) இல்லை. சீனா, இந்தியா, ரஷ்யா, பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு ஆகியவற்றுடன் பிராந்திய சக்திகளும் இணைந்து ஒரு பல்த்துருவ (Multipolar) உலகக் கட்டமைப்பை உருவாக்கி வருகின்றன.
இத்தகையச் சூழலில் இலங்கை போன்றதொரு சிறிய நாடு உயிர்வாழ வேண்டுமாயின், அதற்குப் புதியதொரு அரச தத்துவம் (State Philosophy) அவசியமாகும்.
இந்தியாவின் ஒத்துழைப்பு, தெற்காசியப் பாதுகாப்பு எதார்த்தம் மற்றும் கடல்சார் பூகோள அரசியல் ஆகியவற்றுடன் நமது பொருளாதார ஸ்திரத்தன்மை பிணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இனப்பிரச்சினைக்கும் புதியதொரு தீர்வு அவசியமாகும். மூன்று தசாப்தகால யுத்தம் முடிவடைந்த போதிலும், முறையான அரசியல் தீர்வொன்று இல்லாததால் தேசியப் பிரச்சினை இன்னும் மறைந்துவிடவில்லை.
புதிய குடியரசு என்பது, ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கும் (Unitary State) பல்லின சமூகத்துக்கும் (Multinational Society) இடையே ஒரு புதிய சமநிலையைக் கண்டறியும் முயற்சியாக அமைய வேண்டும்.
பிரெஞ்சு தத்துவஞானி ஜான் ஜாக் ரூசோ (Jean-Jacques Rousseau) குறிப்பிட்ட 'பொது விருப்பம்' (General Will) என்பது, தனிப்பட்ட பிரபுக்களின் நலன்களைவிட, ஒட்டுமொத்தப் பொதுமக்களின் நன்மைகளுக்கு முதலிடம் வழங்குவதாகும்.
இன்று தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணைக்குள்ளும் இத்தகையதொரு பொது மக்கள் எதிர்பார்ப்பே காணப்படுகிறது. ஊழலுக்கு எதிரான போராட்டம், சமூக நீதி, அரச சீர்திருத்தம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை இதற்குள் வரிசைப்படுத்தலாம்.
ஆனால், மக்கள் சக்தியானது முறையான நிறுவனமயப்படுத்தப்பட்ட (Institutionalized) சட்டக் கட்டமைப்பாக மாற்றப்படாவிட்டால், அது மீண்டும் பழைய பிரபு வர்க்கத்தினராலேயே ஆக்கிரமிக்கப்படும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.
1956ஆம் ஆண்டின் மக்கள் புரட்சி, 1977இன் திறந்த பொருளாதாரக் கொள்கை மற்றும் 2022ஆம் ஆண்டின் 'அரகலய' மக்கள் போராட்டம் ஆகிய அனைத்தும் இறுதியாகப் பழைய நிறுவன ரீதியான அதிகாரக் கட்டமைப்புகளினாலேயே மீண்டும் கட்டுப்படுத்தப்பட்டன.
இன்றைய சவால் என்னவெனில், இந்த மக்கள் அரசாங்கத்தை ஒரு தற்காலிக தேர்தல் வெற்றியாக மட்டும் வைத்திருக்காமல், நீண்டகால 'மக்கள் அரசாக' எவ்வாறு மாற்றுவது என்பதாகும்.
அதற்கு ஒரு புதிய அரசியலமைப்பு அவசியமாகும். அது வெறும் ஒரு சட்ட ஆவணமாக (Legal Document) மட்டும் இல்லாமல், ஒரு புதிய சமூக ஒப்பந்தமாக அமைய வேண்டும். அதற்குள் பின்வரும் முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்படுவது கட்டாயமாகும்:
நிறைவேற்று அதிகாரத்தைக் கட்டுப்படுத்துதல், நாடாளுமன்றம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்துதல், இனங்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வுக்கான புதிய மாதிரி (Model for Power Sharing), சமூகப் பாதுகாப்பு மற்றும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துதல், ஊழல் எதிர்ப்புக்கான வலுவான கட்டமைப்புகள் மற்றும் மக்கள் பங்களிப்புடனான ஜனநாயகம்.
'மூன்றாவது குடியரசு' என்பது வெறும் ஒரு பெயர் மாற்றம் மட்டுமல்ல; அது நாட்டின் திசையையே மாற்றுவதாகும். அது ஒரு பிரபுக்களின் அரசிலிருந்து (Elite State) உண்மையானதொரு மக்கள் அரசை (People's State) நோக்கிய நகர்வாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின், இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ள மக்கள் சக்தியானது நாளை மீண்டும் பழைய அதிகார மையங்களுக்குள்ளேயே நழுவிச் சென்றுவிடும்.
இலங்கை அரசியல் வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்துவது ஒன்றையே: "மக்கள் புரட்சிகளைச் செய்வது வெறும் ஆட்சியாளர்களை மாற்றுவதற்காக மட்டுமல்ல, அரசாங்கத்தின் தன்மையையே (Nature of the State) மாற்றுவதற்காகவே ஆகும்!"