இலங்கையின் தற்போதைய இரண்டாவது பெரிய மனிதப்புதைகுழியின் 74 ஆவது நாள் அகழ்வாராய்ச்சியின் போது தோண்டி எடுக்கப்பட்ட ஒன்பது மனித உடல்களில் எட்டு உடல்கள் சிறுவர்களுடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஜூன் 08 ஆம் திகதி விபரிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியிலிருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட 327 மனித உடல்களில் 311 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட 100 க்கும் அருகாமையிலான தடையப் பொருட்களுக்குள் (தனிப்பட்ட பாவனைப் பொருட்கள்) கைக்குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயக் குற்றிகளும் அடங்குகின்றன.
2025இல் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி
நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முதன்முறையாக 2025 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியாகக் கருதப்படுவது, 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட மன்னார் சற்றோச மனிதப்புதைகுழியாகும்.