பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள போதிலும், அந்தச் சட்டத்தின் கீழ் நபர்கள் கைது செய்யப்படுவதும் தடுத்து வைக்கப்படுவதும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்து தான் கடுமையான கவலையடைவதாக சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் தரநிலைகளுக்கு முரணான, அத்தோடு மிகப்பரந்த அதிகாரங்களைக் கொண்ட இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது எழும் சிக்கல் நிலைமைகள், அண்மையில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் ஊடாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
"தமிழீழம்" என்ற வார்த்தைக்காக ஹிப்-ஹொப் கலைஞர் விளக்கமறியலில்!
சர்வதேச மன்னிப்புச் சபை முதன்மையாக முன்னிலைப்படுத்தும் முதலாவது சம்பவம் யாதெனில், சமூக ஊடகங்கள் ஊடாகப் பிரசாரமான இசை நிகழ்ச்சி ஒன்றின் பாடலூடாக எல்.டி.டி.ஈ. (LTTE) அமைப்பைப் பாராட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, ஜூன் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 24 வயதுடைய தமிழ் ஹிப்-ஹொப் (Hip-Hop) கலைஞரான சங்கீதன் கணேஷ்குமார் ஜூன் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையாகும்.
இந்தச் சட்டத்தில் உள்ள தெளிவற்ற குற்ற வரையறைகள் சர்வதேச சட்டத் தரநிலைகளுக்கு முரணானவை எனத் தெரிவிக்கும் மன்னிப்புச் சபை, சர்வதேச நியாயமான விசாரணைத் தரநிலைகளுக்கு அமைய அவருக்கு எதிராக ஏற்றுக்கொள்ளத்தக்க குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்படாவிட்டால், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
தடுப்புக்காவலில் உள்ள சுரேஷ் சலேயின் உண்ணாவிரதமும் மனித உரிமைகளும்
மறுபுறம், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி PTA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தனது அவதானத்தைச் செலுத்தியுள்ளது. தற்போது தடுப்புக் காவலில் உள்ள நிலையில், சுரேஷ் சலே ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் முன்வைக்கும் மனிதநேய உரிமைகள் மற்றும் நடாத்துகைகள் குறித்த பிரச்சினைகளும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்கும் அதேவேளை, சந்தேகநபர்களுக்கும் உரிய சட்ட வழிமுறைகள் (Due process) மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மன்னிப்புச் சபை நினைவூட்டுகின்றது.
அரசியல் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களை இலக்கு வைத்து இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான பாரிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டும் சர்வதேச மன்னிப்புச் சபை, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் (PTA) பயன்படுத்துவதை இடைநிறுத்துமாறும் (Moratorium), எவ்வித தாமதமுமின்றி அதனை முழுமையாக நீக்குமாறும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Ou