‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்;

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்;

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார். அதுவரை பெரும்பாலும் ஸ்டூடியோவுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனைக்கும் கொண்டு சேர்த்தார்.

‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ என அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைந்தன. 'என் இனிய தமிழ் மக்களே' என்ற அவரது குரல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அவரது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய ‘பத்மஸ்ரீ' விருது வழங்கி மத்திய அரசு அவரை கவுரவித்தது. இதுதவிர பல தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் அறிமுகப்படுத்திய ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்தார்.

தமிழ் சினிமாவில் கோலோச்சிய பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலரும் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்தவர்களே. அண்மைக் காலமாக பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தனது முத்திரையைப் பதித்தார்.

கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா, இன்று (ஜூன் 10) அதிகாலையில் காலமானார். அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ”தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும் துயரமும் அடைந்தேன்.

கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கு என தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா. தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இயக்குநர் இமயம் பாரதி ராஜாவின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்." என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

முன்னதாக, நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதி ராஜாவின் உடலுக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா இன்று அதிகாலை காலாமானார்.