மத்திய கிழக்கின் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

மத்திய கிழக்கின் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

அமெரிக்காவின் அண்மைய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானை கடுமையாக தாக்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரான் அதிக காலம் எடுத்தமையினாலேயே இந்த தாக்குதல்களை நடத்துவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் கூறியுள்ளது.

ஈரானின் பதிலடித் தாக்குதல்களிலும் இதே இரு தளங்கள் தான் முன்னதாகவும் இலக்காக்கப்பட்டன.

சமீபத்திய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே அடுத்தடுத்து தீவிரமடைந்து வரும் இந்தத் தாக்குதல்கள், கடந்த ஏப்ரல் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.

அமெரிக்காவின் இந்த சமீபத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள ஈரானின் தெற்குப் பகுதி நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதியில் தான் ஈரானின் வான் பாதுகாப்பு, ரேடார் மற்றும் பிற தளங்களை அமெரிக்கப் படைகள் தாக்கின.

இந்த சமீபத்திய மோதலில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், இது குறித்து உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை.

ஹோர்முஸ் நீரிணை அனைத்து வகையான கப்பல் போக்குவரத்திற்கும் முற்றிலும் மூடப்பட்டுள்ளது என ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக குவைட் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.