ஈஸ்டர் தாக்குதல் விடயத்தில் மிக உயர்மட்ட அரசியல் தலைவர் ஒருவர் இன்றோ நாளையோ கைதாக வாய்ப்பு!

ஈஸ்டர் தாக்குதல் விடயத்தில் மிக உயர்மட்ட அரசியல் தலைவர் ஒருவர் இன்றோ நாளையோ கைதாக வாய்ப்பு!

ஒன்றுக்கும் மேற்பட்ட அநாமதேயப் பெயர்களில் செயற்பட்ட 'சூழ்ச்சிக்காரர்' வலையமைப்பிற்குள் சிக்கினார்!

விசாரணைகளுக்குப் பாதகம் ஏற்படும் என்பதால் பல விபரங்கள் தற்போதைக்கு இரகசியம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகநபரான மிக உயர்மட்ட முன்னாள் அரசியல் தலைவர் ஒருவர் இன்று அல்லது நாளைக்குள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசாங்கத்தின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சி ஊடகமொன்றில் கருத்து வெளியிட்ட பொலிஸ் துறைக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் சுனில் வடகல, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரி இன்று அல்லது நாளைக்குள் கைது செய்யப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஐந்து வெவ்வேறு அநாமதேயப் (புனைப்) பெயர்களில் தோன்றிச் செயற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதில் 'Sonic' என்பது அவரது ஒரு அநாமதேயப் பெயர் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், இது தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ள போதிலும், இந்தத் தருணத்தில் அவை விபரங்களை வெளியிட்டால் விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவற்றை வெளிப்படுத்தப் போவதில்லை என்றும் கூறினார்.

இதேவேளை, மற்றுமொரு ஊடக அறிக்கையின்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாகச் சுரேஷ் சலே மாத்திரமன்றி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்ய வேண்டிய தேவை ஏற்படினும் அதனைச் செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததால், அரசாங்கம் அந்தப் வாக்குறுதியின்படியே செயற்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.