செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து தொடர்ந்தும் சிறுவர்களின் சடலங்கள் மீட்பு!

செம்மணி மனிதப்புதைகுழியிலிருந்து தொடர்ந்தும் சிறுவர்களின் சடலங்கள் மீட்பு!

இலங்கையின் தற்போதைய இரண்டாவது பெரிய மனிதப்புதைகுழியாகக் கருதப்படும் யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் 75ஆவது நாள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் இடம்பெற்ற ஜூலை 10ஆம் திகதியன்று தோண்டி எடுக்கப்பட்ட மனித சடலங்கள் ஏழில் ஆறு சடலங்கள் சிறுவர்களுடையது எனத் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஜூன் 09ஆம் திகதியன்று இந்த மனிதப்புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட ஒன்பது சடலங்களில் எட்டு சடலங்கள் சிறுவர்களுடையதாகும்.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 21ஆவது நாளான ஜூலை 10 புதன்கிழமையன்று 12 புதிய மனித சடல அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

அன்றைய தினம் தோண்டி எடுக்கப்பட்ட 7 சடலங்களுக்குள் இரண்டு பச்சிளம் குழந்தைகள், 4 சிறுவர்கள் மற்றும் ஒரு பெரியவரின் எலும்புக்கூடுகள் காணப்பட்டதாக அகழ்வாராய்ச்சிப் பணிகளை உன்னிப்பாக அவதானித்து வரும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில், இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஒட்டுமொத்த 339 மனித சடலங்களில் 318 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

அங்கு அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்து வரும் சட்டத்தரணிகள் இன்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு மேலும் தெரிவிக்கையில், இந்த மனிதப்புதைகுழியிலிருந்து இரண்டு மாடுகளின் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.

அத்தோடு, செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் சேர்த்து இதுவரையில் மீட்கப்பட்ட நூற்றுக்கு நெருக்கமான தனிப்பட்ட பாவனைப் பொருட்களுக்குள் பச்சிளம் குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களின் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயக் குற்றிகளும் அடங்குகின்றன.

நீதிமன்ற உத்தரவின் கீழ் அகழ்வாராய்ச்சி

நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண நீதிமன்ற மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிநடத்தலின் கீழ், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முதன்முறையாக கடந்த 2025 மே 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியாகக் கருதப்படுவது மன்னார் சதோச மனிதப்புதைகுழியாகும். அங்கிருந்து 28 சிறுவர்கள் உட்பட 376 மனித உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.