தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் அவர் மேற்கொண்ட தோல்வியுற்ற இராணுவச் சட்டப் (Martial Law) பிரகடனத்திற்கு ஒரு போலியான காரணத்தை உருவாக்குவதற்காக, வட கொரியாவின் பியொங்யாங் நகருக்கு மேல் இராணுவ துரோன்களை (Drones) அனுப்பிய குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக யோன்ஹாப் (Yonhap) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கடந்த 2024 அக்டோபரில் வட கொரிய எல்லைக்குள் ஊடுருவிய துரோன் சதித்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் அதற்கு உடந்தையாக இருந்து சதி செய்துள்ளார் என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவர் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் எதிரிக்கு உதவிய குற்றங்களுக்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.

எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி யூன் மறுத்துள்ளார். இந்தத் துரோன் நடவடிக்கைக்கு தான் உத்தரவிடவும் இல்லை, பின்னர் அதற்கு அங்கீகாரம் வழங்கவும் இல்லை என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டனர். அத்தோடு, இந்நடவடிக்கை இராணுவச் சட்டப் பிரகடனத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், வட கொரியாவினால் பல மாதங்களாக எல்லைக்கு மேல் குப்பைகள் நிரப்பப்பட்ட பலூன்கள் அனுப்பப்பட்டமைக்கு பதிலடி கொடுப்பதற்காகவே இது மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வழக்கில் முன்னாள் ஜனாதிபதி யூனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குமாறு கடந்த ஏப்ரல் மாதம் அரசுத்தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தைக் கோரியிருந்தனர்.

அரசியல் நெருக்கடி மற்றும் முந்தைய தீர்ப்புகள்

முன்னர் தென் கொரியாவின் தலைமை அரசுத்தரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய இந்த பழமைவாதத் தலைவரின் (Conservative Leader) இராணுவச் சட்டப் பிரகடனமானது, ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதார நாடான தென் கொரியாவை தசாப்த காலங்களில் இல்லாதவாறு மிக மோசமான அரசியல் கொந்தளிப்புக்குள் தள்ளியிருந்தது. பதவி நீக்கம் செய்யப்பட்ட இவருக்கு எதிராக வழங்கப்பட்ட தொடர்ச்சியான தீர்ப்புகளின் வரிசையில் இன்றைய தீர்ப்பும் இணைந்துள்ளது.

இதற்கு முன்னர், கடந்த பெப்ரவரி மாதத்தில், இராணுவச் சட்ட முயற்சி தொடர்பான கிளர்ச்சிக்கு (Insurrection) தலைமை தாங்கிய குற்றச்சாட்டின் கீழ் தென் கொரிய நீதிமன்றம் ஒன்று யூனுக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

அரசியலமைப்பு நீதிமன்றத்தினால் அவரது நாடாளுமன்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை (Impeachment) உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் கடந்த ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அவசர பொதுத்தேர்தலில் தாராளவாதக் கட்சியின் (Liberal) தலைவர் லீ ஜே மியுங் (Lee Jae Myung) புதிய ஜனாதிபதியாக வெற்றி பெற்றார்.

தற்போது ஏற்கனவே காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல், கீழ் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.