இலங்கையின் சிறைச்சாலைகளை பார்வையிட சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா குழு கொழும்பு செல்கிறது!

இலங்கையின் சிறைச்சாலைகளை பார்வையிட சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா குழு கொழும்பு செல்கிறது!

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணைக் குழுவின் (Subcommittee on Prevention of Torture - SPT) விசேட தூதுக்குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பின்படி, இது இக்குழுவின் இரண்டாவது இலங்கை விஜயமாகும். சித்திரவதைகளுக்கு எதிரான சாசனத்தின் விருப்பத்திற்கிணங்கான நெறிமுறையில் (Optional Protocol to the Convention against Torture - OPCAT) இலங்கை 2017ஆம் ஆண்டில் இணைந்துகொண்டதன் பின்னர், முதலாவது விஜயம் 2019 ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயிஷா ஷுஜூன் முஹம்மத் (Aisha Shujune Muhammad) அம்மையாரின் தலைமையிலான நான்கு பேரடங்கிய இந்த சர்வதேச தூதுக்குழு, இலங்கையின் சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் தடுப்புக் காவல் அறைகளை நேரில் பார்வையிட்டு அவதானிக்கவுள்ளது.

இதற்கு மேலதிகமாக, அவர்கள் அரசாங்க அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய சித்திரவதை தடுப்பு பொறிமுறையாகச் (National Preventive Mechanism - NPM) செயற்படும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

தற்போதைய அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் சபையுடன் திறந்த மற்றும் வெளிப்படையான கொள்கையொன்றைப் பின்பற்றி வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இலங்கையில் பொலிஸ் காவலில் நிகழும் மரணங்கள், சித்திரவதைகள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) துஷ்பிரயோகங்கள் குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

எனவே, இந்த விஜயமானது அரசாங்கம் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் விம்பத்திற்கும், களத்தில் நிலவும் உண்மை நிலவரத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய பரீட்சையாக அமையும்.

இலங்கை பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக ஸ்திரத்தன்மையைப் பெற முயற்சிக்கும் இவ்வாறானதொரு பின்னணியில், இத்தகைய சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது அத்தியாவசியமானதாகும்.

ஒரு நாகரிகமடைந்த நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின், அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பிரஜைகளின் அடிப்படை உரிமைகளையும் மனிதப்ண்புகளையும் (மனித மாண்பையும்) பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடைமுறை ரீதியாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.