ஒரு குழந்தையின் ஐகியூ (IQ) அறிவு மட்டம், பெற்றோரின் வளர்ப்பு முறை (Parenting style) அல்லது அவர்களது மருத்துவ வரலாறு போன்ற காரணிகளை விடவும், அக்குழந்தையின் குடும்ப வருமானம் மற்றும் அவர்கள் வளரும் அக்கம் பக்கத்துச் சூழலே (Neighbourhood) மூளை வளர்ச்சியில் மிக வலுவான தாக்கத்தை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
அமெரிக்காவின் மிசூரி, செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் (Washington University School of Medicine) ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழுவினர், 9 மற்றும் 10 வயதுடைய சுமார் 12,000 குழந்தைகளின் மூளை ஸ்கேன் விபரங்களை பகுப்பாய்வு செய்து இம்முடிவை வெளியிட்டுள்ளனர்.
மூளை வளர்ச்சியைத் தீர்மானிக்கும் 649 காரணிகள்
ஆராய்ச்சியாளர்கள் ஒரு குழந்தையின் வாழ்க்கையை வடிவமைக்கக்கூடிய தூக்கம், திரை நேரம் (Screen time), உடல் மற்றும் மன ஆரோக்கியம், நட்புகள், குடும்ப உறவுகள் மற்றும் சமூகப் பொருளாதார நிலைமைகள் உள்ளிட்ட 649 காரணிகளை விரிவாக ஆராய்ந்தனர்.
அதில், குடும்ப வருமானம், சொந்த வீடு, அக்கம் பக்கத்து வறுமை விகிதங்கள் மற்றும் வளங்களுக்கான அணுகல் போன்ற சமூகப் பொருளாதாரக் காரணிகளே (Socioeconomic factors) குழந்தைகளின் மூளைக் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுடன் மிகவும் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வின்படி, மூளையின் செயல்பாட்டு அளவீடுகளில் காணப்படும் மாறுபாடுகளில் சுமார் 16 வீதத்திற்குச் சமூகப் பொருளாதாரக் காரணிகளே பொறுப்பாகும்.
இது ஆராயப்பட்ட மற்ற எந்தவொரு பிரிவையும் விட மிகப்பெரிய பங்காகும். இதற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட 'Adolescent Brain Cognitive Development (ABCD)' நீண்டகால ஆய்வுத் திட்டத்தின் MRI ஸ்கேன் தரவுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையின் மறைமுகத் தாக்கம்
மூளையின் செயல்பாட்டுடன் மிக வலுவாக இணைக்கப்பட்ட முதல் 40 காரணிகளில் 37 காரணிகள் சமூகப் பொருளாதார நிலைமைகளுடன் தொடர்புடையவை ஆகும்.
அதேபோல, மூளையின் கட்டமைப்போடு தொடர்புடைய முதல் 40 காரணிகளில் 35 சமூகப் பொருளாதாரக் காரணிகளாகும். தூக்கம், மன அழுத்தம் மற்றும் திரை நேரம் ஆகியவையும் மூளை வளர்ச்சியுடன் தொடர்புடையவை என்றாலும், அவை சமூகப் பொருளாதார நிலைமைகளைப் போல வலுவாக இல்லை.
சமூகப் பொருளாதாரக் காரணிகள், மூளையின் இயக்கம் மற்றும் உணர்ச்சிச் செயலாக்கத்துடன் (Movement and sensory processing) தொடர்புடைய பகுதிகளில் நெருங்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இப்பகுதிகள் தூக்கத்தின் தரம் மற்றும் மன அழுத்தத்தினால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை ஆகும்.
இதன்படி, சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சூழலில் வாழும் குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட மன அழுத்தம் (Chronic stress) மற்றும் சீர்குலைந்த தூக்கம் ஆகியவற்றின் மூலமாகவே அவர்களது மூளை மறைமுகமாகப் பாதிக்கப்படுகிறது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், சமூகப் பொருளாதாரக் காரணிகளுக்கும் மூளை வளர்ச்சிக்கும் இடையிலான இந்தத் தொடர்பானது இனம் (Race) அல்லது பாலினம் (Sex) போன்ற புள்ளிவிபரப் பண்புகளால் தூண்டப்படவில்லை என்பதையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
ஐகியூ (IQ) மற்றும் மூளைக் கட்டமைப்பு பற்றிய புதிய பார்வை
மூளையின் உடல் ரீதியான அம்சங்கள் மூலம் புத்திசாலித்தனத்தை (Intelligence) அடையாளம் காண முடியும் என்ற நீண்டகால வாதங்களையும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் பரிசோதித்தனர்.
சமூகப் பொருளாதார நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு, ஐகியூ (IQ) மதிப்பெண்களுக்கும் மூளைக் கட்டமைப்பு அல்லது செயல்பாட்டிற்கும் இடையே முன்னதாகக் காணப்பட்ட பல தொடர்புகள் மிகவும் பலவீனமடைந்தன. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அந்தத் தொடர்புகளில் சுமார் 70 வீதமானவை புள்ளிவிபர ரீதியாக முக்கியத்துவமற்றதாக மாறின.
உயர்ந்த சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குழந்தைகளை மட்டும் தனியாக பகுப்பாய்வு செய்தபோது, ஐகியூ (IQ) மதிப்பெண்களுக்கும் மூளையின் கட்டமைப்பு அல்லது செயல்பாட்டு அளவீடுகளுக்கும் இடையே எவ்வித தொடர்பும் காணப்படவில்லை.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் பேராசிரியரும், இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான நிகோ டோசன்பாக் (Nico Dosenbach) இதுகுறித்துக் குறிப்பிடுகையில், "நீங்கள் நடுத்தர வர்க்கம் முதல் உயர் வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டால், அவர்களின் மூளைத் தரவைக் கொண்டு உங்களால் அவர்களின் ஐகியூவை (IQ) கணிக்க முடியாது, அங்கு உயிரியலுக்கான தொடர்பு முற்றிலும் மறைந்துவிடுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் தினசரி சூழலில் காணப்படும் வேறுபாடுகள், முன்னதாகப் புரிந்து கொள்ளப்பட்டதை விடவும் மூளை வளர்ச்சியை வடிவமைப்பதில் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருக்கலாம் என்பதையே இந்த கண்டுபிடிப்புகள் காட்டுவதாக ஆய்வின் ஆசிரியர்கள் நிவர்த்தி செய்துள்ளனர்.