நீண்டகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கைக்குச் சம்மதம் தெரிவித்துள்ளன.
ஈரானுக்கு எதிரான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா நீக்கும்; பதிலுக்கு உலகளாவிய எரிபொருள் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹொர்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாகத் திறக்கும்.
பேச்சுவார்த்தையாளர்கள் மிகச் சிறந்த உடன்பாட்டை எட்டியுள்ளதால், ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களைத் தான் ரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த தீவிர யுத்த சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இரு நாடுகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாக சர்வதேச இராஜதந்திர வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த உடன்படிக்கையின் மிக முக்கிய கட்டமாக, உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்தின் பிரதான பாதையான ஹொர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் உடனடியாக மீண்டும் திறக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்குப் கைமாறாக, ஈரானிய கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் மீது அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருந்த கடல்சார் முற்றுகையை (Maritime Blockade) உடனடியாக நீக்குவதற்கு அமெரிக்கா இணங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த இணக்கப்பாடானது உலகளாவிய சந்தையில் எரிபொருள் விலையை ஸ்திரப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தையாளர்கள் மிகச் சிறந்ததொரு இணக்கப்பாட்டை எட்டியுள்ளதன் காரணமாக, ஈரான் மீது நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதல்களைத் தான் ரத்து செய்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையானது இரு நாடுகளினதும் இராஜதந்திரத் தொடர்புகளில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
மறுபுறம், இந்த உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த 60 நாட்களுக்குள் ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பு (Enriched Uranium) தொடர்பான அடுத்தகட்ட தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளன.
ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியப் பொருட்கள் அனைத்தும் அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டு, பின்னர் ஈரானிலிருந்து அகற்றப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அமெரிக்கா இந்த உடன்படிக்கைக்கு உடன்பட்டுள்ளதாக வாஷிங்டன் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், ஈரானுக்கு முன்கூட்டியே எவ்வித நிதி அல்லது சொத்துக்களும் விடுவிக்கப்பட மாட்டாது என்றும், பொருளாதார நன்மைகள் அனைத்தும் ஈரான் தனது கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதைப் பொறுத்தே அமையும் என்றும் அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.