எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்கா - ஈரான் இடையிலான உத்தியோகபூர்வ அமைதி உடன்படிக்கை கையெழுத்தாகவுள்ளதால் சர்வதேச சந்தையில் நிம்மதிப் பெருமூச்சு.
ஒரே நாளில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை 4 வீதத்தாலும், அமெரிக்க டபிள்யூடிஐ (WTI Crude) விலை 4.7 வீதத்தாலும் வீழ்ச்சி.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீதான போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த வழமையான விலையை நோக்கிச் சந்தை நகர்வு.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்தாகவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்படிக்கை (US-Iran Deal) காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தையில் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மேலும் 4 வீதத்தால் வீழ்ச்சியடைந்து, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த மட்டத்தைப் பதிவு செய்துள்ளன.
ரோய்ட்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை வெளியிட்டுள்ள விபரங்களின்படி, சர்வதேச சந்தையின் முக்கிய அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்கால வர்த்தகம் (Brent crude futures) ஒரு பேரலுக்கு 3.29 டொலர்கள் அல்லது 4 வீதத்தால் சரிவடைந்து 79.88 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
அதேபோல, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 3.82 டொலர்கள் அல்லது 4.7 வீதத்தால் வீழ்ச்சியடைந்து 76.93 டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.
யுத்தத்திற்கு முந்தைய நிலையை நோக்கி எண்ணெய் சந்தை
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடுத்து யுத்தத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், உலகச் சந்தையில் இந்த இரு கச்சா எண்ணெய் வகைகளும் ஒரு பேரல் 65 டொலர்கள் முதல் 70 டொலர்கள் வரையிலான விலையிலேயே வர்த்தகம் செய்யப்பட்டு வந்தன.
யுத்தம் காரணமாக கடுமையாக உயர்ந்திருந்த விலைகள், தற்போது போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் வழமையான நிலைக்குத் திரும்பி வருகின்றன. முன்னதாக எண்ணெய் விலைகள் 2 வீதத்திற்கும் அதிகமாகச் சரிவடைந்துள்ளதாக எமது செய்திச் சேவை செய்தி வெளியிட்டிருந்த பின்னணியில், தற்போது சந்தை மூடும் வேளையில் இந்த வீழ்ச்சி 4 வீதத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.