பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட சுமார் 380 மனித உடல்களுக்குச் சொந்தமான எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு தற்செயலாகக் கண்டறியப்பட்ட யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி (Mass Grave), இலங்கையின் வரலாற்றிலேயே கண்டறியப்பட்ட ஆகப் பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் திகதி வரையான ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியில், மூன்று கட்டங்களின் கீழ் செம்மணி சித்துப்பாத்தி (Chemmani Sithubathi) மனிதப் புதைகுழியில் 81 நாட்களாக அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட 380 உடல்களுள், 362 மனித உடல்களுக்குரிய எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் (UN Committee Against Torture) பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பின்னணியிலேயே, ஜூன் 17ஆம் திகதியன்று இப்பொதுப் புதைகுழியிலிருந்து மேலும் 14 நபர்களுக்குரிய எலும்பு எச்சங்கள் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட சான்றுப் பொருட்கள்
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து மனித எலும்புகளுடன் சேர்த்து, இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட 120 இற்கு நெருக்கமான ஏனைய தனிப்பட்ட சான்றுப் பொருட்களுள் (Personal belongings) பச்சிளம் குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களின் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயக் குற்றிகளும் அடங்குகின்றன.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிநடத்தலில் யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முதன்முறையாக கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழிகளின் வரிசை
செம்மணி புதைகுழி நாட்டின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியுள்ள நிலையில், இலங்கையின் ஏனைய முக்கிய மனிதப் புதைகுழிகளின் விபரங்கள் வருமாறு:
யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி - 380 உடல்கள் (தற்போது நாட்டின் மிகப்பெரிய புதைகுழி).
மன்னார் சத்தொச புதைகுழி - 376 உடல்கள் (28 சிறுவர்களின் உடல்கள் உட்பட - தற்போது நாட்டின் 2ஆவது பெரிய புதைகுழி).
மாத்தளை மருத்துவமனை புதைகுழி - 155 உடல்கள் (2013ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது - 3ஆவது பெரிய புதைகுழி).
கொழும்பு துறைமுகப் புதைகுழி - 106 உடல்கள் (குறைந்தபட்சம் 106 பேரின் எச்சங்கள் மீட்பு - 4ஆவது பெரிய புதைகுழி).
மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழி - 82 உடல்கள் (2013ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது - 5ஆவது பெரிய புதைகுழி).
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி - 52 உடல்கள் (அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த போது 52 உடல்கள் மீட்பு - 6ஆவது பெரிய புதைகுழி).
அரசாங்க விசாரணைகள் அல்ல, அனைத்தும் தற்செயலான கண்டுபிடிப்புகள்!
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள இந்த அனைத்துப் பிரதான மனிதப் புதைகுழிகளும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புலனாய்வு அல்லது திட்டமிட்ட விசாரணைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல என்றும், அவை அனைத்தும் வெவ்வேறு காரணங்களுக்காக நிலத்தைத் தோண்டிய போது தற்செயலாகவே (By accident) வெளிச்சத்திற்கு வந்தவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நாடாளாவிய ரீதியில் ஒளிபரப்பிய விசேட நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றிருந்த அன்றைய நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார முதன்முறையாகப் பகிரங்கப்படுத்துகையில், இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 17 மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.