கடற்படை முறைகேடு; ராஜபக்ஷவின் மகன் கைதாகி பிணையில் விடுதலை!

கடற்படை முறைகேடு; ராஜபக்ஷவின் மகன் கைதாகி பிணையில் விடுதலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் இன்று (17) முற்பகல் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்ட முழுமையான விபரம் வருமாறு:

யோஷித ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.00 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் (Sri Lanka Navy) நிறைவேற்றுப் பிரிவுக்கு மாணவர் அதிகாரி (Cadet Officer) ஒருவராக இணையும் போது, அதற்கரிய முறையான தகைமைகளைப் பூர்த்தி செய்யாதிருந்தமை, மற்றும் அப்போதிருந்த உத்தியோகபூர்வ நடைமுறைகளுக்குப் புறம்பாக அரசாங்க நிதியைப் பயன்படுத்தி பிரித்தானியாவின் ராயல் கடற்படைக் கல்லூரியில் (Royal Naval College) பயிற்சிப் பாடநெறியொன்றில் கலந்துகொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவரிடம் சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், குறித்த ஊழல் குற்றச்சாட்டிற்கு உடந்தையாக இருந்தமை என்ற குற்றச்சாட்டின் கீழ் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆணைக்குழு நீதிமன்றத்தில் முன்வைத்த காரசாரமான வாதங்கள்

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சார்பில் அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ருவினி விக்ரமசிங்க மற்றும் உதவிப் பணிப்பாளர் நாயகம் அமா விஜேசிங்க ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, கடந்த 2016 ஜூலை 25ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாகவே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.

தகுதியான ஏனைய விண்ணப்பதாரர்கள் இருந்தபோதிலும், எவ்விதத் தகுதியும் இல்லாத இந்தச் சந்தேகநபரை கடற்படைப் பயிற்சிக்காக இங்கிலாந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதற்குப் பின்னணியில் இருந்த முறைகேடுகளை அவர்கள் நீதிமன்றத்தில் பின்வருமாறு விவரித்தனர்:

"கனம் நீதவான் அவர்களே, 2006 அக்டோபர் மாதத்தில் ஒரு சாதாரண சிவிலியனாக இருந்த இந்தச் சந்தேகநபர், இங்கிலாந்தின் 'ராயல் நேவி யங் ஆபீசர்ஸ் கோர்ஸ்' (Royal Navy Young Officers Course) என்ற பயிற்சிப் பாடநெறிக்காக விண்ணப்பிக்கிறார். இந்த பாடநெறியில் கலந்துகொள்ள வேண்டுமாயின், கடற்படைக் கேடட் அதிகாரியாக 2 வருடப் பயிற்சியை முடித்த ஒரு திறமையான மாணவராக அவர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, கியூசெக் உயர்தரப் பரீட்சையில் (A/L) கணிதம் அல்லது விஞ்ஞானப் பாடத்துறையில் சித்தியடைந்திருக்க வேண்டும். ஆனால் இந்தச் சந்தேகநபர் கலைப் பிரிவிலேயே (Arts) உயர்தரப் பரீட்சை எழுதியுள்ளார்.

இதன் காரணமாக, இந்தச் சந்தேகநபர் குறித்த பாடநெறிக்கு விண்ணப்பிக்கும் வகையில் கடற்படையின் உத்தியோகபூர்வ தகைமைகள் திருத்தியமைக்கப்படுகின்றன. அதன்படி விஞ்ஞானம், வர்த்தகம் அல்லது கலைப் பிரிவில் ஏதேனும் இரண்டு பாடங்களில் சித்தியடைந்திருந்தால் போதுமானது என்றும், சாதாரண தரப் பரீட்சையில் (O/L) கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் அல்லது சிங்களப் பாடங்களில் சிறப்புச் சித்தி (Credit Pass) பெற்றிருக்க வேண்டும் என்றும் தகைமைகளை மாற்றிப் பத்திரிகை விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.

இதன் பின்னர், 2006 டிசம்பர் 14 அன்று இந்தச் சந்தேகநபர் உட்பட 26 பேர் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், இந்தச் சந்தேகநபர் கடற்படையில் இணைத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னரே, அதாவது டிசம்பர் 06ஆம் திகதியே மருத்துவப் பரிசோதனைக்கு (Medical Test) உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் 2007 ஜனவரி 01ஆம் திகதி அவர் பயிற்சிக்காக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இவ்வாறான உயர் பாடநெறிகளுக்கு கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் மிகத் திறமையான மாணவர்களை மாத்திரமே அனுப்ப முடியும். 1995 முதல் 2010 வரை 5 அதிகாரிகள் மாத்திரமே இதற்கு Scholarship மூலம் அனுப்பப்பட்டனர். ஆனால், இந்தச் சந்தேகநபரின் பாடநெறிக்காக அரசாங்கம் 6,284,218.61 ரூபா மக்கள் பணத்தைச் செலவிட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், லஞ்ச ஊழல் சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் 'ஊழல்' குற்றத்தைச் சந்தேகநபர் புரிந்துள்ளார்.

இந்தச் சந்தேகநபரும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவும் இணைந்தே இந்தச் சதியைச் செய்துள்ளனர் என்பது சாட்சியங்கள் மூலம் தெளிவாகிறது."

சந்தேகநபர் தரப்பு வாதம் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு

இதனைத் தொடர்ந்து சந்தேகநபரான யோஷித ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் நீதிமன்றத்தில், இந்த விசாரணை சுமார் 10 வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட ஒன்று எனச் சுட்டிக்காட்டினார்.

"கனம் நீதவான் அவர்களே, எனது கட்சிக்காரருக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டைச் சுமத்த முடியாது. எவர் வேண்டுமானாலும் ஒரு பாடநெறிக்கு விண்ணப்பிக்க முடியும். தகைமைகள் இருந்தால் மாத்திரமே அவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். எனது கட்சிக்காரரும் அவ்வாறே விண்ணப்பித்தார், அவர் தெரிவு செய்யப்பட்டார். அதில் அவர் செய்வதற்கு எதுவும் இல்லை, எனவே அவர் மீது தவறைச் சுமத்த முடியாது" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு என். சில்வா, சந்தேகநபரான யோஷித ராஜபக்ஷவை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் (Body Bails) விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் யோஷித ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்து நீதவான் உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.