ஈஸ்டர் தாக்குதலின் ‘மகா சதி’ மற்றும் தப்புலவின் மௌனம்: சாஜத் மௌலானாவின் சாட்சியம்! 

ஈஸ்டர் தாக்குதலின் ‘மகா சதி’ மற்றும் தப்புலவின் மௌனம்: சாஜத் மௌலானாவின் சாட்சியம்! 

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களுக்குப் பின்னணியில் ஒரு "மகா சதி" (Grand Conspiracy) இருந்ததாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வெளியிட்ட கருத்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் இலங்கை அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

‘The Island’ நாளிதழின் மூத்த ஊடகவியலாளர் ஷாமீந்திர பெர்னாண்டோ எழுப்பிய விசேட கேள்விக்கு பதிலளித்துள்ள முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தற்போதைய சட்டமா அதிபர் பரின ரணசிங்கவிடம் உடனடியாக தப்புல டி லிவேராவை அழைத்து வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் உடன்படிக்கையா? ஓய்வு பெற்ற கோபமா?

விஜயதாச ராஜபக்ஷவின் குற்றச்சாட்டின்படி, தப்புல டி லிவேரா இந்த "மகா சதி" கதையை தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களுக்காகவே பயன்படுத்தியுள்ளார். அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனக்கு மேலும் ஒரு வருட காலத்திற்கு சேவை நீடிப்பு (Service Extension) வழங்குமாறு தப்புல கோரியிருந்ததாக விஜயதாச வெளிப்படுத்தியுள்ளார்.

அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாலும், பின்னர் அவருக்கு வழங்கப்பட்ட கனடாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவி மறுக்கப்பட்டதாலுமே, அவர் இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார் என விஜயதாச குற்றம் சாட்டியுள்ளார்.

தப்புலவின் நிலைப்பாடு: தாக்குதல் நடத்தப்பட்ட நேரம், இலக்குகள் மற்றும் அதன் வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அரச புலனாய்வுப் பிரிவிடம் (SIS) இருந்ததால் இது ஒரு திட்டமிடப்பட்ட சதியாகும்.

விஜயதாசவின் வாதம்: பதவி நீடிப்பு கிடைக்கவில்லை என்பதற்காக நாட்டை உலுக்கிய முன்னாள் சட்டமா அதிபர், தனக்குத் தெரிந்த அனைத்து சான்றுகளையும் உடனடியாக புலனாய்வாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கர்தினால் மற்றும் புதிய பாதுகாப்பு பிரதானிகளின் பின்னணி

தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவு நியமனங்கள் காரணமாக இந்த விவகாரம் தற்காலத்தில் மேலும் சிக்கலடைந்துள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோரின் நியமனங்கள், கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் ஆலோசனையின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இது குறித்துப் பேசிய விஜயதாச ராஜபக்ஷ,

"ஈஸ்டர் தாக்குதலுக்கான நீதியைக் கோரும் கர்தினால் உள்ளிட்ட தரப்பினர், இப்போதாவது தற்போதைய சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுத்து தப்புல டி லிவேராவிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற வேண்டும். உண்மையான சதியாளர்களைக் கண்டறிய அது மிக அத்தியாவசியமானது"

என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சுரேஷ் சலேவின் கைது மற்றும் சுவிட்சர்லாந்து சாட்சியாளர்

கடந்த பிப்ரவரி 25ஆம் திகதி, புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டார். சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ள அசாத் மௌலானா என்ற நபர் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையிலேயே இக்கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவரிடம் வாக்குமூலம் பெற சிஐடி குழுவொன்று பாரிஸ் நகருக்குக் கூட சென்றிருந்தது.

புலனாய்வு ஊடகவியலாளர் ஷாமீந்திர பெர்னாண்டோ சுட்டிக்காட்டுவது போல், விஜயதாச ராஜபக்ஷவின் வலுவான வாதம் என்னவெனில்; வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒருவரின் சாட்சியத்தை மாத்திரம் நம்பியிருக்காமல், தாக்குதல் நடந்த காலகட்டத்தில் நாட்டின் சட்ட அமைப்பை வழிநடத்திய தப்புல டி லிவேராவிடம் உள்ள சாட்சியங்களை விசாரிப்பதே உண்மையான நீதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழியாகும் என்பதாகும்.

கடந்த 2021ஆம் ஆண்டில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) தன்னிடம் வாக்குமூலம் பெற வந்த போது, தப்புல டி லிவேரா நீதிமன்றத்தை நாடி அதனைத் தடுத்து நிறுத்தினார். ஆனால், இப்போது நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்துவதற்கு அவருக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் சட்ட ரீதியான மற்றும் தார்மீக ரீதியான பொறுப்பு உள்ளதாக விவாதங்கள் எழுந்துள்ளன.