ஓமான் வளைகுடாவில் (Gulf of Oman) அமெரிக்கா விதித்திருந்த இராணுவ முற்றுகைக் கோட்டை, கச்சா எண்ணெய் (Crude Oil) ஏற்றப்பட்ட மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்கள் வெற்றிகரமாகக் கடந்து சென்றுள்ளதாக கப்பல் கண்காணிப்புத் தரவுகள் (Ship-tracking data) தெரிவிக்கின்றன.
இவற்றில் இரண்டு கப்பல்கள் முற்றுகைக் கோட்டையைக் கடக்கும் போது தங்களின் இருப்பிட சிக்னல்களை (Location) ஒளிபரப்பியதுடன், மூன்றாவது கப்பல் கோட்டையைத் தாண்டியவுடன் தனது இருப்பிட கண்காணிப்பானை (Location tracker) இயக்கியுள்ளது.
ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை "உடனடியாக நீக்குவதாக" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரெம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்த போதிலும், ஈரானுடனான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை இந்த முற்றுகை அமுலில் இருக்கும் என அமெரிக்க கடற்படைப் படைகள் பின்னர் உறுதிப்படுத்தின. இந்த முக்கிய ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் (ஜெனிவாவில்) கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து 'விண்ட்வேர்ட் மெரிடைம் இண்டலிஜென்ஸ்' (Windward Maritime Intelligence) நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் மிச்செல் வைஸ் போக்மேன் பிபிசி (BBC Verify) செய்திக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
"முற்றுகை வரும் வெள்ளிக்கிழமை வரை அமுலில் இருக்கும் என அமெரிக்கா வலியுறுத்திய போதிலும், தங்களுக்கு எதிரான முற்றுகை முடிவுக்கு வந்துவிட்டது என்பதில் ஈரான் முழு நம்பிக்கை கொண்டுள்ளதையே இது காட்டுகிறது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க தடைகளுக்கு ஆளான தேசிய ஈரான் நிறுவனம்
ஈரானிய கொடியிடப்பட்ட 'டியோனா' (Diona), 'ஹிரோ II' (Hero II) மற்றும் 'சோனியா I' (Sonia I) ஆகிய இந்த மூன்று எண்ணெய் கப்பல்களும், அமெரிக்க திறைசேரியினால் (US Treasury) தடைகளுக்கு உள்ளாக்கப்பட்ட 'தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்கு' (NITC) சொந்தமானவையாகும்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என்ற அச்சம், வொஷிங்டனினால் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட குழுக்களுக்கு ஈரான் வழங்கும் ஆதரவு மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற காரணங்களுக்காக ஈரான் மீது அமெரிக்கா நீண்டகால தடைகளை விதித்துள்ளது.
'மெரின் ட்ராஃபிக்' (MarineTraffic) தரவுகளின்படி, 'ஹிரோ II' மற்றும் 'சோனியா I' ஆகிய கப்பல்கள் செவ்வாய்க்கிழமை ஈரானின் 'சபஹார்' (Chabahar) துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலையில் அமெரிக்க முற்றுகைக் கோட்டையைத் தாண்டி அரபிக்கடலுக்குள் (Arabian Sea) நுழைந்துள்ளன. அங்கு மேலும் பல ஈரானிய கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.
இரண்டு மாதங்களின் பின்னர் முதல் ஏற்றுமதி
ஓமானின் கிழக்கு முனையில் இருந்து ஈரானின் கடற்கரை வரை நீளும் அமெரிக்க முற்றுகைக் கோட்டையைத் தாண்டிய உடனேயே 'டியோனா' கப்பல் நேற்று தனது இருப்பிடத்தை ஒளிபரப்பத் தொடங்கியது.
கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு இந்த ஈரானிய கப்பல்கள் தங்களின் இருப்பிடத்தை பகிரங்கமாக ஒளிபரப்புவது இதுவே முதல் முறை என 'விண்ட்வேர்ட்' கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இக்கப்பல்கள் தங்களின் இலக்கை அடைந்தால், அது கடந்த இரண்டு மாதங்களில் ஈரானின் முதலாவது எண்ணெய் ஏற்றுமதியாக அமையும் என 'TankerTrackers.com' தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மூன்று கப்பல்களும் மொத்தமாக 3.8 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்து செல்கின்றன. எனினும், அவை தங்களின் இறுதி இலக்கு எங்கு என்பதை இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை.
அமெரிக்க முற்றுகை காரணமாக, கடந்த மே மாதத்தில் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு நாளொன்றுக்கு 260,000 பேரல்களாகக் குறைவடைந்தது. இது 2025ஆம் ஆண்டின் சராசரி ஏற்றுமதியான 1.67 மில்லியன் பேரல்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானதாகும்.
உலகளாவிய ரீதியில் சுறுசுறுப்பாகும் ஈரானிய கப்பல்கள்
அமெரிக்கா தனது முற்றுகையின் ஆரம்பத்தில், வளைகுடா பிராந்தியத்திற்கு வெளியேயும் இந்த கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படலாம் என அறிவித்திருந்தது. வளைகுடாவில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள இந்தியப் பெருங்கடலில் (Indian Ocean) ஈரானுடன் தொடர்புடைய கப்பல்களை அமெரிக்கப் படைகள் இடைமறித்ததை பிபிசி (BBC Verify) முன்னரே செய்தி வெளியிட்டிருந்தது.
அதேவேளை, NITC நிறுவனத்திற்குச் சொந்தமான 'ஸ்ட்ரீம்' (Stream) என்ற மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல் தற்போது அமெரிக்க முற்றுகைக் கோட்டை நோக்கி நகர்வதுடன், அது ஈரான் நோக்கி பயணிப்பதாகத் தெரிகிறது. எண்ணெய் ஏற்றப்படாத அந்த வெற்று கப்பல், மே 8ஆம் திகதி முதல் பாகிஸ்தானின் கராச்சி (Karachi) துறைமுகத்திற்கு வெளியே வட்டமிட்டுக் கொண்டிருந்ததாக கப்பல் கண்காணிப்புத் தரவுகள் காட்டுகின்றன.
அமெரிக்கா - ஈரான் இடையிலான ஒப்பந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, "ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் உலகளாவிய ரீதியில் கணிசமான அளவு சுறுசுறுப்படைந்துள்ளன" என 'அணு ஆயுத ஈரானுக்கு எதிரான ஒன்றியம்' (UANI) என்ற கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மலேசியா மற்றும் இந்தோனேசியாவுக்கு இடையிலான 'மலாக்கா நீரிணையில்' (Strait of Malacca) தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான 'டான்' (Dan) மற்றும் 'சினோபா' (Sinopa) ஆகிய மேலும் இரு கச்சா எண்ணெய் கப்பல்களும் செவ்வாய்க்கிழமை முதல் தங்களின் இருப்பிடங்களை ஒளிபரப்பத் தொடங்கியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பொதுக் கப்பல் கண்காணிப்புத் தளங்களில் காணப்படாமல் இருந்த இவ்விரு கப்பல்களும் இப்போது ஈரான் நோக்கி பயணிப்பதாகத் தெரிகிறது. "ஈரான் தனது எண்ணெய் கப்பல்களை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டு வருவதில் எவ்வித நேரத்தையும் வீணடிக்கவில்லை" என ஆய்வாளர் போக்மேன் மேலும் தெரிவித்துள்ளார்.