கைதுக்கு எதிரான தடை உத்தரவு கோரும் மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.
"காரணமின்றி ஒருவரைக் கைது செய்து சிறையிலடைப்பது பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யும் நீதியாகாது!" என கோட்டாபய தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி வாதம்.
விசாரணைகளை நடத்தும் சிஐடி அதிகாரி ஷானி அபேசேகரவுக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா கடுமையான குற்றச்சாட்டுகள்.
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில், தன்னைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு இன்று (18) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இம்மனு மீதான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"நீதி வழங்குவது என்பது காரணமின்றிச் சிறையிலடைப்பதல்ல" - ஜனாதிபதி சட்டத்தரணி
இன்றைய தினம் நீதிமன்றில் மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பாக முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது வாதங்களை முன்வைக்கையில்,
"ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவது என்பது, எவ்விதமான நியாயமான அடிப்படைகளுமின்றி நபர்களைக் கைது செய்து சிறையிலடைப்பது அல்ல"
என்று சுட்டிக்காட்டினார்.
பிரதிவாதிகள் எவ்வித நியாயமான காரணங்களுமின்றித் தனது கட்சிக்காரருக்கு (கோட்டாபய ராஜபக்ஷவிற்கு) எதிராக நீதிமன்றத்தின் ஊடாக வெளிநாட்டுப் பயணத்தடையைப் பெற்றுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி, எவ்வித அடிப்படைகளுமின்றி அவரது தனிப்பட்ட சுதந்திரம் இதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தனது கட்சிக்காரர் கைது செய்யப்படும் பட்சத்தில், அவருக்குப் பிணை பெற்றுக்கொள்வதற்கான சுதந்திரம் முழுமையாகப் பறிக்கப்படும் என்றும், அதனாலேயே மனுதாரர் இந்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார் என்றும் அவர் விவரித்தார்.
நீதிபதியின் கேள்வி மற்றும் சட்டத்தரணியின் எதிர்வினை
இதன்போது நீதியரசர் சரத் திஸாநாயக்க குறுக்கிட்டு,
"ஒரு விசாரணையை 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய முடியாத சந்தர்ப்பங்களில், இவ்வாறான சட்ட விதிகளையும் ஏற்பாடுகளையும் பயன்படுத்துவது வழக்கமானதுதானே?"
எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, ஒரு தனிநபரின் சுதந்திரத்தைப் பறிப்பதற்காக அத்தகைய அவசரச் சட்ட விதிகளையோ அல்லது ஏற்பாடுகளையோ தன்னிச்சையாகப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக தற்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 6 தொகுதிகளைக் கொண்ட அறிக்கையின் எந்தவொரு இடத்திலும் மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதை நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
எனினும், 'ஜயந்தீ டி அல்விஸ்' ஆணைக்குழு அறிக்கையின்படி, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்குத் தவறியமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அன்றைய பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச பயங்கரவாத அமைப்பொன்றின் தலையீடு இருப்பது குறித்து தகவல்கள் வெளிவந்திருந்த போதிலும், சர்வதேச பொலிஸாரின் (Interpol) உதவியைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஷானி அபேசேகர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இவ்வாறான பின்னணியைக் கொண்ட ஒரு நபர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை வழிநடத்துவது பாரிய சிக்கல் வாய்ந்தது என்றும், பல்வேறு நபர்களைக் கைது செய்யுமாறு அவர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு விடுக்கும் அழுத்தங்களால் அத்திணைக்களமும் தற்போது நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பதில்
இதன்போது பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹார்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் வாதாடுகையில்,
"மனுதாரர் தரப்பு சட்டத்தரணி, சட்டமா அதிபர் திணைக்களத்தை ஒரு 'சூத்திரதாரி அல்லது இயங்கு பொம்மை' (Puppet) போல சித்தரிக்க முற்படுகிறார். இது முழுக்க முழுக்க ஊடகங்களை (Media) இலக்கு வைத்துச் செய்யப்படும் வெறும் அரசியல் கூற்றாகும்" எனத் தெரிவித்து கடும் ஆட்சேபனையை வெளியிட்டார்.
இக்குற்றச்சாட்டை நிராகரித்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டமா அதிபரைத் தனிப்பட்ட ரீதியில் குற்றம் சாட்டவில்லை என்றும், சட்டமா அதிபர் திணைக்களம் தற்போதைய விசாரணைகளால் தள்ளப்பட்டுள்ள இக்கட்டான நிலையை மாத்திரமே தான் சுட்டிக்காட்டியதாகவும் விளக்கமளித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், மனுவின் மேலதிக பரிசீலனைகளை வரும் ஜூன் 24ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது.