ஒப்பந்தம் கையெழுத்தான சில மணித்தியாலங்களில் 6 மில்லியன் பேரல் எண்ணெயுடன் 3 சவூதி அரேபிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்' கையெழுத்து.
ஒப்பந்தத்தில் லெபனான் போர்நிறுத்தம் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்; அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை சீர்குலைத்த ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்' (MOU) கையெழுத்திட்டுள்ளனர்.
இதன் எதிரொலியாக, பல மாதங்களாக முடங்கிக்கிடந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) உடனடியாகத் திறக்கப்பட்டு, 6 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைத் தாங்கிய சவூதி அரேபிய கொடியுடனான மூன்று பிரம்மாண்ட சூப்பர்டேங்கர் (Supertankers) கப்பல்கள் வியாழக்கிழமையன்று பாதுகாப்பாக அந்நீரிணையைக் கடந்துள்ளன.
எண்ணெய் சந்தையில் உடனடித் தாக்கம்
இரு நாடுகளினதும் ஜனாதிபதிகள் புதன்கிழமையன்று இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, திட்டமிட்டதை விட இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இது அமுலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறப்பதற்கும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை (U.S. blockade) நீக்குவதற்கும் வழிவகுத்துள்ளது.
போருக்கு முந்தைய நிலையை அடைய இன்னும் சில காலம் எடுக்கும் என கப்பல் நிறுவனங்கள் குறிப்பிட்ட போதிலும், உலக சந்தையில் இதன் தாக்கம் உடனடியாகப் பிரதிபலித்தது. முன்னதாக தாக்குதல்களுக்கு அஞ்சி தங்களின் இருப்பிடக் குறியீடுகளை (Transponders) அணைத்து வைத்திருந்த கப்பல்கள், தற்போது தங்களின் இருப்பிடங்களை ஒளிபரப்பி நீரிணையைக் கடக்கத் தயாராகி வருகின்றன.
இதன் காரணமாக உலக சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை மேலும் 2% ஆல் வீழ்ச்சியடைந்து, பேரல் ஒன்று 78 டொலருக்கும் கீழ் குறைந்துள்ளது.
லெபனான் விவகாரமும் அமெரிக்க - இஸ்ரேல் வரலாற்று விரிசலும்
அமெரிக்கா - ஈரான் இடையிலான இந்த 14 அம்ச ஒப்பந்தம் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 60 நாட்கள் பேச்சுவார்த்தைக் காலத்தை ஆரம்பித்துள்ளது. எவ்வாறாயினும், ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பினருக்கு எதிராக லெபனானுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்பேச்சுவார்த்தைகளில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்பட்டுள்ளது.
லெபனானிலும் அமைதி ஏற்படாவிடின் எவ்வித உடன்படிக்கையும் சாத்தியமில்லை என்ற ஈரானின் நிபந்தனைக்கு இணங்கி, ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தில் "லெபனான் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருதல்" மற்றும் "அதன் இறையாண்மையை உறுதிப்படுத்துதல்" ஆகிய அம்சங்கள் நேரடியாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதனால் அதிருப்தியடைந்துள்ள இஸ்ரேல், ட்ரம்ப் என்ன பேச்சுவார்த்தை நடத்தினாலும் தாங்கள் லெபனானில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அறிவித்துள்ளதுடன், தெற்கு லெபனானில் தங்களின் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பகுதியை 'பாதுகாப்பு வலயம்' (Buffer zone) எனக் காட்டும் புதிய வரைபடத்தையும் வியாழன்று வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீதான போரைத் தொடங்கிய டொனால்ட் ட்ரம்பின் இந்த திடீர் கொள்கை மாற்றம், கடந்த சில தசாப்தங்களில் அமெரிக்கா - இஸ்ரேல் உறவுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மிகப்பாரிய விரிசலாகக் பார்க்கப்படுகிறது.
தொடரும் வான்வழித் தாக்குதல்கள்
ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், லெபனானில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ள சூழலில், இஸ்ரேலிய படைகள் வியாழக்கிழமை காலையும் தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட் நகரின் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
தெற்கு லெபனானின் கஃபார்டெப்னிட் (Kfartebnit) மற்றும் ஜெப்தீன் (Zebdine) ஆகிய நகரங்கள் மீது நடத்தப்பட்ட இந்த குண்டுவீச்சுகளில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் நாட்டுச் செய்திச் சேவையான NNA தெரிவித்துள்ளது.
"ஈரானியர்களும் அமெரிக்கர்களும் ஒப்பந்தம் செய்து முடித்துவிட்டார்கள். ஆனால் லெபனானில் இன்னும் போர் ஓயவில்லை. போர் உண்மையாகவே முடிந்துவிட்டதா இல்லையா என்ற இறுதிப் பதிலை அவர்கள் எங்களுக்கு வழங்க வேண்டும்"
என தெற்கு நகரான நபடியேவிலிருந்து (Nabatieh) இடம்பெயர்ந்து பெய்ரூட்டில் முகாமில் தங்கியுள்ள முகமது டோக்மன் என்ற குடிமகன் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பிற்குள் எழும் உள்நாட்டுக் விமர்சனங்கள்
ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பது, அதன் இராணுவ பலத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் அதன் தீவிரவாத ஆதரவைத் தடுப்பது ஆகிய நோக்கங்களுடனேயே ட்ரம்ப் 4 மாதங்களுக்கு முன்னர் இந்த போரை ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் ஈரானின் "நிபந்தனையற்ற சரணாகதியை" (Unconditional surrender) ட்ரம்ப் கோரியிருந்த போதிலும், தற்போது அந்த நோக்கங்கள் எதுவும் நிறைவேறாத நிலையிலேயே அவர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக ட்ரம்பின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த தீவிரப் போக்காளர்களும் (Hawks) அரசியல் விமர்சகர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.