Côte-des-Neiges பகுதியில் பகல் வேளையில் அரங்கேறிய துப்பாக்கிச்சூட்டில் 34 வயதுடைய மொன்றியல் பொலிஸ் அதிகாரி வீரமரணம்.
துப்பாக்கிதாரி உட்பட மூன்று பேர் உயிரிழப்பு; மற்றொரு பெண் பொலிஸ் அதிகாரி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.
ஹோட்டல் அறையிலிருந்து 100 பக்கங்களுக்கும் அதிகமான துப்பாக்கிதாரியின் கொள்கை அறிக்கை (Manifesto) மீட்பு; பெண்களின் விடுதலைக்கு எதிரான 'இன்செல்' (Incel) கொள்கைகள் உள்ளடக்கம்.
பிரபல ஆபாச இணையத்தளமான 'PornHub' இன் தாய் நிறுவனத்திற்கு அருகிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கனடாவின் மொன்றியல் (Montreal) நகரின் Côte-des-Neiges பகுதியில் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 22) பகல் வேளையில் நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், கடமையில் இருந்த 34 வயதுடைய பொலிஸ் அதிகாரி மற்றும் பொதுமக்கள் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரியும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என கியூபெக்கின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இயன் லஃப்ரினியர் (Ian Lafrenière) உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இந்த விவகாரம் குறித்த விசாரணைகள் கியூபெக்கின் பொலிஸ் கண்காணிப்பு அமைப்பான 'பீரோ டெஸ் என்குவெட்ஸ் இண்டிபெண்டென்டெஸ்' (BEI) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பலியானவர்கள் விபரம்
முகமது லமின் பென்ரெடோவான் (Mohamed Lamine Benredouane - 34): 2021 ஆம் ஆண்டு முதல் மொன்றியல் பொலிஸ் சேவையில் (SPVM) பணியாற்றி வந்த இவர், பொதுமக்களைக் காப்பாற்ற முயன்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
மைக்கேல் மோஷே மிஸ்ராஹி (Michael Moshe Mizrahi): துப்பாக்கிச்சூட்டில் பலியான அப்பாவிப் பொதுமக்கள் ஆவார். இவர் யூத சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினர் என இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம் (CIJA) தெரிவித்துள்ளது.
துப்பாக்கிதாரி (சந்தேகநபர்): இராணுவ உடை (Camouflage) அணிந்து, முதுகுப்பை மற்றும் நீண்ட துப்பாக்கியுடன் வந்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த இத்தாக்குதல்தாரி பொலிஸாரின் எதிர்விசாரணையில் சுட்டுக் கொல்லப்பட்டார், இவரது விபரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஹோட்டலில் சிக்கிய 100 பக்க 'இன்செல்' கொள்கை அறிக்கை
துப்பாக்கிதாரி தங்கியிருந்த ஹோட்டல் அறையைச் சோதனையிட்ட பொலிஸார், அவதனால் எழுதப்பட்ட 100 பக்கங்களுக்கும் அதிகமான நீண்ட கொள்கை அறிக்கை (Manifesto) ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.
'இன்செல்' (Incel - Involuntary Celibate) கொள்கை என்றால் என்ன? இது பெண்களால் நிராகரிக்கப்பட்டதாக உணரும் சில ஆண்கள், தங்களை "விருப்பமில்லாத பிரம்மச்சாரிகள்" என அழைத்துக்கொண்டு, பெண்களின் விடுதலை மற்றும் சமத்துவத்திற்கு எதிராகவும், ஒட்டுமொத்த சமூக அமைப்பிற்கு எதிராகவும் வெறுப்பைப் பரப்பும் தீவிரவாத மனப்பான்மை கொண்ட ஒரு சித்தாந்தமாகும்.
கொள்கை அறிக்கையின் முக்கிய விபரங்கள்:
குடிமக்கள் அனைவரும் ஆயுதமேந்தி "அமைப்புக்கு எதிராகப் புரட்சி" செய்ய வேண்டும் என அதில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்தை எதிர்த்துள்ள துப்பாக்கிதாரி, ஆபாசப் படத் தொழில்துறைக்கு (Porn Industry) எதிராகவும் தனது கடுமையான வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, "பெரிய ஆபாச மாநாடுகள், சர்வதேச ஆபாச நிறுவனங்களின் தலைமையகங்கள் மற்றும் ஆபாசத் துறையின் மூலம் பெரும் பணம் சம்பாதிக்கும் பிரபல நடிகர், நடிகைகள்" ஆகியோர் இலக்கு வைக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
PornHub நிறுவனத்திற்கு அருகில் நடந்த தாக்குதல்: இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்த பகுதி, உலகின் மிகப்பெரிய ஆபாச இணையத்தளமான 'PornHub' இன் தாய் நிறுவனமான 'Aylo' மற்றும் அதன் துணை நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது துப்பாக்கிதாரியின் திட்டமிட்ட இலக்கை உறுதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தலைவர்களின் இரங்கல் மற்றும் தேசியக் கொடி அரைக்கம்பம்
இச்சம்பவம் குறித்து கனடாப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது எக்ஸ் (X) தளத்தில், "மொன்றியல் துப்பாக்கிச்சூடு குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பொதுமக்களைக் காக்கத் தங்களின் உயிரைப் பணயம் வைக்கும் எமது துணிச்சலான பொலிஸ் அதிகாரிகளுக்கு எனது நன்றிகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
கியூபெக் பிரீமியர் கிறிஸ்டின் பிரெச்செட் (Christine Fréchette) மற்றும் மொன்றியல் மேயர் சொரயா மார்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் துயர நிகழ்வையொட்டி மொன்றியல் மற்றும் கியூபெக் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.