கிழக்கு காணி பாதுகாப்பிற்கு விசேட அதிரடிப்படை!

கிழக்கு காணி பாதுகாப்பிற்கு விசேட அதிரடிப்படை!

கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகாரம் மற்றும் தொடர்புகளை துஷ்பிரயோகம் செய்து முன்னெடுக்கப்படும் பாரியளவிலான சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள், அத்துமீறிய நில நிரப்பல்கள் மற்றும் கடற்கரையோர கட்டுமானங்களை உடனடியாக தடுப்பதற்காக, பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி விசேட அமைச்சரவை தீர்மானங்கள் சில பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, இந்த சட்டவிரோத செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஒருவரின் தலைமையிலான விசேட சட்ட அமலாக்கல் பிரிவொன்றை உடனடியாக நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கிழக்கு மாகாண காணிப் பயன்பாடும் தற்போதைய பின்னணியும்

கிழக்கு மாகாணத்தின் காணிப் பயன்பாடானது தொடர்ச்சியாக கடுமையான சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியிலான மோதல்களை தோற்றுவிக்கும் ஒரு மையப்புள்ளியாக இருந்து வந்தது. அரசியல் பின்னணிகளுடன் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் அழிவுக் காரணமாக கிழக்குக் கடற்கரையோரம் வேகமாக அரிப்புக்குள்ளாகி வருவதுடன், உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும் இடம்பெயர்ந்த மக்களை நிலையாக மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கங்கள் தவறியுள்ளன.

இ நிலைமையானது பிராந்திய அபிவிருத்திக்கு மாத்திரமன்றி, தேசிய பாதுகாப்பிற்கும் (National Security) நேரடி அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக தற்போதைய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

புதிய அமைச்சரவை தீர்மானங்கள் ஊடாக ஏற்படும் முக்கிய மாற்றங்கள்:

விசேட பாதுகாப்புக் குழு: முன்னாள் காணி ஆணையாளரும், தற்போதைய தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளருமான சேனக பள்ளியகுருேகவின் தலைமையில் "கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்கும்" விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு, நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மகாவலி காணிகளை மீளப் பொறுப்பேற்றல்: ஸ்ரீலங்கா மகாவலி அதிகார சபையினால் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் அல்லது அதற்கு முன்னர் வர்த்தக நோக்கங்களுக்காக வழங்கப்பட்டு, இதுவரை எவ்வித திட்டங்களும் ஆரம்பிக்கப்படாத காணிகளை உடனடியாக அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது. இக்காணிகள் பிரதேச செயலாளர்கள் ஊடாக உள்ளூர் மக்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக மீளப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

சுற்றுச்சூழல் நட்புரிமையுடனான சுற்றுலாத் திட்டங்கள்: கிழக்குக் கடற்கரையின் உயர் சுற்றுலாத் திறனை (Tourism potential) பயன்படுத்துகின்ற அதேவேளை, கடற்கரை கட்டமைப்பைப் பாதுகாக்கும் வகையில் புதிய திட்டமொன்று தயாரிக்கப்படவுள்ளது. அத்துடன், கடற்கரையில் நடத்தப்படும் ஹோட்டல்கள் தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் பாரபட்சமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறையொன்றும் உருவாக்கப்படவுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களின் கருத்து: கிழக்கு காணிப் பிரச்சினையானது வெறும் சட்டப் பிரச்சினை மாத்திரமன்றி, இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகவும் உணர்வுபூர்வமான ஒரு விடயமாகும்.

இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் அரசியல் நெருக்கங்களின் அடிப்படையில் இந்த அத்துமீறிய காணி ஆக்கிரமிப்புகள் தொடர்பில் மென்போக்கைக் கடைப்பிடித்த போதிலும், புதிய அரசாங்கம் DIG ஒருவரின் கீழ் விசேட படையணியை நிறுவத் தீர்மானித்துள்ளமை ஒரு சாதகமான அணுகுமுறையாகும்.

இருப்பினும், ஹோட்டல் வர்த்தகர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களிடமிருந்து ஏற்படும் அழுத்தங்களுக்கு மத்தியில், அதிகாரிகள் சுயாதீனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிப்பதே இத்திட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும்.