வெனிசுலாவில் நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 188 ஆக உயர்வு!

வெனிசுலாவில் நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 188 ஆக உயர்வு!

வெனிசுலாவின் வடக்குக் கடலோரப் பகுதியைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, மேலும் 1,520 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு தேசிய சபையின் தலைவர் ஜோர்ஜ் ரொட்ரிக்ஸ் (Jorge Rodríguez) தெரிவித்துள்ளார்.

அத்துடன், 157 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளதுடன், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படும் 200க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, 138 அதிர்வுகள் (Aftershocks) பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கங்கள் காரணமாக 250 கட்டடங்கள் மற்றும் 20 வணிக வளாகங்கள் உட்பட 346 உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதுடன், 8 வைத்தியசாலைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

சேதமடைந்த வீடுகள் மற்றும் வைத்தியசாலைகளை மறுசீரமைப்பது உள்ளிட்ட அவசர மறுவாழ்வுப் பணிகளுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் சிறப்பு நிதியமொன்றை ஒதுக்கீடு செய்ய வெனிசுலா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ் (Delcy Rodríguez) தேசிய அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.