ஆப்கானிஸ்தானில் அரச ஊழியர்கள் ஸ்மார்ட்போன்களை (Smartphones) பயன்படுத்துவதற்கு தலிபான் அரசாங்கம் நாடு தழுவிய ரீதியில் தடை விதித்துள்ளதாக இராணுவ நீதிமன்ற உத்தரவொன்று காட்டுகிறது.
இந்த நடவடிக்கையானது தகவல்களைப் பெற்றுக்கொள்வதை மேலும் கட்டுப்படுத்தக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
ரோய்ட்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை பார்வையிட்ட அந்த நீதிமன்ற உத்தரவில், "நீதிபதிகள் உட்பட இராணுவம் மற்றும் சிவில் நிறுவனங்களின் அனைத்து அதிகாரிகளும்" ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது ஜூன் 16ஆம் திகதி முதல் தடை செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்களின் கைபேசிகள் அடித்து நொறுக்கப்படும் என்பதுடன், அவர்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கான கோரிக்கைக்கு தலிபான் நிர்வாகம் இதுவரை பதிலளிக்கவில்லை.
இக்கட்டுப்பாடானது ஏற்கனவே உத்தியோகபூர்வ பணிகளைப் பாதித்துள்ளதாக அரச ஊழியர்கள் தெரிவிப்பதுடன், குறைந்தது ஒரு மாகாண அதிகாரசபையாவது இந்தத் தடையை உடனடியாக அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளது.
"இதன் தாக்கம் மிகவும் பாரியளவில் உள்ளது. பெரும்பாலான உத்தியோகபூர்வ பணிகள் முன்னதாக கைபேசிகள், வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் மின்னஞ்சல் (Email) மூலமாகவே மேற்கொள்ளப்பட்டதால், தற்போது பல நிர்வாகச் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன" என அரச ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பஞ்ச்ஷீர் (Panjshir) மாகாண ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தடையானது மாகாணத்திலுள்ள அனைத்து அலுவலகங்களுக்குள்ளும் அமுல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானியர்கள் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கும், மனித உரிமை மீறல்களைப் பதிவு செய்வதற்கும், தனிப்பட்ட ரீதியில் தொடர்புகொள்வதற்கும் மற்றும் தணிக்கை செய்யப்படாத தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்தும் சில கருவிகளில் ஸ்மார்ட்போன்களும் ஒன்று என மனித உரிமை அமைப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2021 ஓகஸ்ட் மாதம் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, பொது மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தங்களது கட்டுப்பாட்டை மேலும் இறுக்குவதற்கான மற்றொரு படியாக இந்த உத்தரவு அமையலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
சிறுமிகள் இடைநிலைப்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்கு இன்னமும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பல பெண்கள் வேலைவாய்ப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்கள், தடுத்து வைப்புக்கள் மற்றும் தணிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகப் புகாரளித்துள்ளனர்.
"இன்று ஸ்மார்ட்போன் என்பது வெறும் பொழுதுபோக்குக்கான சாதனம் மட்டுமல்ல" என அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட பெண் உரிமை ஆர்வலரான சனம் கபிரி தெரிவித்துள்ளார்.
"அரசு அலுவலகங்களில் இதன் பயன்பாடு தடை செய்யப்படும் போது, இதன் நோக்கம் நிர்வாக ஒழுங்கைப் பேணுவதற்கும் அப்பால், தகவல்களையும் தொடர்பாடல்களையும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கலாம் என்ற கவலைகளை எழுப்புகிறது" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.