"பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை அவற்றின் சட்டபூர்வமான ஐதீகக்காரர்களிடம் (உரிமையாளர்களிடம்) ஒப்படைப்பது தேசிய நல்லிணக்கத்திற்கு மிக முக்கியமானது" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் தற்போது பாதுகாப்புத் தரப்பினரின் வசமுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்கும் வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கும், அந்தச் செயல்முறையை மேலும் துரிதப்படுத்துவதற்குமான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் மின்சக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க, கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் ருவன் கொடித்துவக்கு ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
யுத்தக் காலம் தொட்டு பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தி வந்த வட மாகாணக் காணிகளை, அவற்றின் சட்டபூர்வ உரிமையாளர்களிடம் மீள ஒப்படைப்பது தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டிலும், இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவதிலும் ஒரு தீர்க்கமான படியாகும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், பிராந்திய நிர்வாகக் கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இந்தச் செயல்முறையை முன்னெடுப்பது வடக்கின் சமூக மற்றும் பொருளாதார மறுமலர்ச்சிக்கு நேரடிப் பங்களிப்பை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
காணி விடுவிப்புச் செயல்முறையில் எட்டப்பட்ட 3 முக்கிய முடிவுகள்:
தேசிய பாதுகாப்புச் சபையின் தலையீடு: தற்போது பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் உள்ளவாறு அடையாளம் காணப்பட்ட காணித் துண்டுகளை அவற்றின் சட்டபூர்வ உரிமையாளர்களிடம் விடுவிப்பதற்கான இறுதிச் சட்ட மற்றும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை தேசிய பாதுகாப்புச் சபை (NSC) ஊடாக நிறைவு செய்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
கள ஆய்வுகளும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளும்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கடந்த மாதம் யாழ். குடாநாட்டின் முக்கிய பகுதிகளுக்கு மேற்கொண்ட கள விஜயத்தின் போது அவதானிக்கப்பட்ட நடைமுறைச் சவால்கள் குறித்து இங்கு அரச பங்காளிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதற்கமைய, நிலவும் நிர்வாகத் தடைகளை நீக்கி, தொடர்புடைய காணிகளின் எல்லை நிர்ணயங்களை (Demarcation) விரைவாக முடிப்பதற்கும், இழப்பீடு வழங்கும் செயல்முறைகளை துரிதப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு: பாதுகாப்புத் தரப்பினரின் காணிகளை விடுவிப்பதற்கு இணையாக, வட பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நிலவும் நடைமுறைச் சவால்களை வெற்றிக்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள் மற்றும் சிவில் நிர்வாக நிறுவனங்களுக்கு இடையே பயனுள்ள ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ் விசேட மீளாய்வுக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, யாழ். மாவட்டச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட தொடர்புடைய அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.