வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று (27) சனிக்கிழமை காலை மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிச்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், அந்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த புதன்கிழமை வெனிசுலாவில் ரிச்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அலகாகப் பதிவான மிகப்பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 920 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 243 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, 3,360க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் (Caracas) உட்பட வடக்கு பிராந்தியத்தில் உள்ள பல கட்டடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. காயமடைந்தவர்கள் தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலநடுக்கத்தை அடுத்து பலர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, மீட்புப் பணிகளுக்காக சர்வதேச மீட்புக் குழுவினரும் தற்போது வெனிசுலாவைச் சென்றடைந்துள்ளனர்.
இதேவேளை, பிரதான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை 214 பின்னதிர்வுகள் (Aftershocks) ஏற்பட்டுள்ளதாகவும், இதில் தலைநகருக்கு வடக்கே அமைந்துள்ள 'லா குவைரா' (La Guaira) பகுதியே மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அத்துடன், நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் 1,000க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.