ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும்

ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும்

சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டணி (TNC), ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்த மாநாடு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கூட்டணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான பிரதிநிதிகள், விரிவான கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் கையளித்தனர். அதில், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகள், சர்வதேச விசாரணையின் அவசியம், இந்திய மற்றும் ஈழத் தமிழ் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு, இந்தியாவில் வாழும் ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகால பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

அந்த மனுவில், தமிழ்த் தேசத்தின் தனித்துவத்தையும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் அமைப்பே நிலையான அரசியல் தீர்வை வழங்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் தமிழர் தேசியப் பிரச்சினைக்கு நீடித்த தீர்வு கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் முன்மொழியப்படும் புதிய ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை இந்திய அரசு ஆதரிக்கக் கூடாது என்றும், கூட்டாட்சி அடிப்படையிலான அரசியல் தீர்வை ஆதரிக்க தமிழ்நாடு அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

1987 இந்திய–இலங்கை ஒப்பந்தம் மற்றும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும் மனுவில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாகாண சபை முறை தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற இயலாது என்றும், அது மத்திய ஆட்சியின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுகிறது என்றும் கூட்டணி தெரிவித்துள்ளது.

இதனுடன், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், ஈழத் தமிழர் பிரச்சினையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அமைப்புகளும் இணைந்து செயல்படும் ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் தலைமையில் அமைக்க வேண்டும் என்றும், அந்தக் குழு மூலம் அனைத்துக் கட்சிகளின் மாநாட்டை நடத்தி ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்த ஒருமித்த அரசியல் நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஒருமித்த நிலைப்பாடு, இந்திய அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வலுவான ஜனநாயகச் செய்தியை எடுத்துச் செல்லும் என கூட்டணி தனது மனுவில் தெரிவித்துள்ளது.