ஈரானின் முன்னாள் உயரிய தலைவர் அயத்துல்லா அலி காமெனெயின் அரச மரியாதையுடனான இறுதிச்சடங்கில் பங்கேற்க இலங்கை அரசாங்கம் தனது பிரதிநிதிகளை தெஹ்ரானுக்கு அனுப்பியுள்ளது.
இலங்கை சார்பில் சபாநாயகர் குழுவின் பிரதிநிதியும் அரச உயர் அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. காமெனெயின் மறைவுக்கு பின்னர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்துக்குச் சென்று இரங்கல் பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்தார்.
இந்தப் பங்கேற்பு, இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகளை மீண்டும் வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் ஈரான் வழங்கிய இராஜதந்திர, பொருளாதார மற்றும் பிற ஆதரவுகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுப்பெற்றிருந்தது.
காமெனெயின் இறுதிச்சடங்கில் ஈரானின் பிராந்திய கூட்டணி நாடுகள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிகழ்வு, மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றங்களுக்கிடையில் ஈரானின் சர்வதேச கூட்டணிகளையும் அதன் இராஜதந்திர உறவுகளையும் மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது