கனடாவின் டொராண்டோ மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அமலில் இருந்த கடும் வெப்ப எச்சரிக்கையை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை (Environment Canada) அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.
அடுத்த சில நாட்களில் வெப்பநிலை முந்தைய அளவைக் காட்டிலும் குறைந்து, பருவகாலத்திற்கேற்ற மிதமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பகல் நேரங்களில் வெப்பநிலை மிதமான அளவில் இருக்கும் நிலையில், இரவு நேரங்களில் மேலும் குளிர்ச்சியான சூழல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை அல்லது திடீர் மழைப் பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த வாரம் நீடித்த வெப்ப அலை காரணமாக டொராண்டோ நகரில் குளிர்விப்பு மையங்கள் திறக்கப்பட்டதுடன், நீச்சல் குளங்கள் மற்றும் பொது வசதிகளின் சேவை நேரங்களும் நீட்டிக்கப்பட்டிருந்தன. தற்போது வெப்ப எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதால், நகரின் வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.
அதேவேளை, அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் தொடர்ந்து போதியளவு தண்ணீர் அருந்தி, வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்