ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலை நேற்றைய தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி அந்நாட்டு அமீர் முஹம்மது அல் நஹ்யானை நேற்றுமுன்தினம் சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அப்போது அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் கட்ட 27 ஏக்கர் நிலத்தை அந்த நாட்டுஅரசு வழங்கியது. இதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில்கோயில் கட்டுமான பணி தொடங்கியது. ரூ.700 கோடியில் கோயில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்றுமுன்தினம் அபுதாபி சென்றார். அந்த நாட்டு அமீர் முஹமது பின் சையது அல் நஹ்யானை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே துறைமுகம், முதலீடு, எரிசக்தி, வர்த்தகம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்பான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. யுஏஇ-யில் யுபிஐ மற்றும் ரூபே அட்டை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் பிறகு இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
இரண்டாம் நாளான நேற்று சுவாமி நாராயண் கோயில் திறப்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.