1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்

1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்

மதுரை: மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி, மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான மூன்று நாள் சிறப்பு பயிற்சி முகாம் மதுரையில் நடைபெற்றது.

 

மதுரை தெரசா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் அ. ஆனந்தி தலைமை தாங்கினார். புதிய பாடத்திட்டத்தின் நோக்கம், கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொண்டு கற்றுக்கொள்ளும் வகையிலான புதிய அணுகுமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டன.

 

இந்தப் பயிற்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட ஐந்து பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 300 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். குழந்தைகளை மையமாகக் கொண்ட கற்றல் முறைகள், செயல்வழிக் கற்பித்தல், மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான வகுப்பறை செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பயிற்சியில் இடம்பெற்றன.

 

பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அடுத்த கட்டமாக வட்டார அளவில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சியை வழங்க உள்ளனர். இதன் மூலம் புதிய பாடத்திட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாகவும், திறம்படவும் செயல்படுத்தப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் துணை முதல்வர், முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிறப்பாக மேற்கொண்டனர். இந்தப் பயிற்சி, ஆரம்பக் கல்வியில் தரமான மாற்றத்தை உருவாக்குவதற்கான முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.