சுவிஸ் தூதருடன் ரெலோ சந்திப்பு

சுவிஸ் தூதருடன் ரெலோ சந்திப்பு

பாலநாதன் சதீசன்

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து கொள்ளும் சுவிற்சலாந்தின் இலங்கைக்கான தூதுவர் மேன்மை தங்கிய சிரி வால்ட் அம்மையாரை சுவிற்சலாந்து தூதரகத்தில் இன்று 07-07-2026 தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பிரதிநிதிகள் மரியாதை நிமித்தம் சந்தித்தனர்.

இச் சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவரும் பேச்சாளரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வடமாகாண தேசிய அமைப்பாளருமான குருசுவாமி சுரேந்திரன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான  செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூதுவரின் பதவி காலத்தில் தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்டமைக்கு நன்றி கூறப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளை சுவிற்சலாந்துக்கு அழைத்தும், தூதரகத்திற்கு அழைத்தும், பாராளுமன்றத்திலும் மற்றும் அவர் மேற்கொண்ட வடக்கு கிழக்கு விஜயங்களின் பொழுதிலும் ஒற்றுமைப்படுத்துவதற்கான காத்திரமான முயற்சிகளை அம்மையார் மேற்கொண்டு இருந்தார். இருப்பினும் துரதிஷ்டவசமாக அந்த ஒற்றுமை முயற்சி நிறைவேறாவிட்டாலும் கூட எதிர்காலங்களிலும் சுசிலாந்தின் தூதரகம் அந்த முயற்சியை தொடர வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்ததோடு அதற்கு தாம் பரிபூரண ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் கட்சிப் பிரதிநிதிகள் தரப்பால் எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் தமிழ் மக்களின் இன நலன் சார்ந்த விடயங்களில் சுவிஸ் தூதரகமும்  கடந்த கால தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் சார்பில் தாங்கள் வரவேற்பதாகவும் தொடர்ந்தும் இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அம்மையாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் இச் சந்திப்பு நிறைவு பெற்றது.

குருசுவாமி சுரேந்திரன்

உப தலைவர் /பேச்சாளர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்