டொரொன்டோ நகரம், Seneca Polytechnic, Toronto Fire Services மற்றும் Toronto Police Service ஆகியவை இணைந்து, இளைஞர்களை அவசரகால சேவைத் துறைகளில் பணியாற்ற ஊக்குவிக்கும் நோக்கில் "Youth Community Academy" என்ற புதிய முன்னோடி (Pilot) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த கோடைக்கால திட்டத்தின் மூலம், 40 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு மாத காலம் நேரடி பயிற்சியில் பங்கேற்கின்றனர். முதல் மாதத்தில் தீயணைப்பு சேவைகள் தொடர்பான பயிற்சியும், இரண்டாவது மாதத்தில் காவல்துறை அடிப்படைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் இந்தப் பயிற்சிக்காலத்தில் சம்பளமும் பெறுவதுடன், எதிர்கால கல்விக்குப் பயன்படுத்தக்கூடிய Micro-credit சான்றிதழும் வழங்கப்படுகிறது.
டொரொன்டோ மேயர் Olivia Chow கூறுகையில், இந்தத் திட்டம் இளைஞர்களுக்கு தொழில்திறன், தன்னம்பிக்கை மற்றும் சமூக சேவை உணர்வை வளர்க்கும் சிறந்த வாய்ப்பாகும் என்றார்.
"பல மாணவர்கள் சம்பளமில்லாத பயிற்சிகளில் கலந்து கொள்ள முடியாது. இந்தத் திட்டம் அவர்களுக்கு வருமானத்தையும் அனுபவத்தையும் ஒரே நேரத்தில் வழங்குகிறது. இது அனைவருக்கும் வெற்றிகரமான திட்டமாக இருக்கும்," என அவர் தெரிவித்தார்.
டொரொன்டோ நகரில் தீயணைப்பு மற்றும் காவல்துறைகளில் புதிய பணியாளர்களை அதிகரிக்க தொடர்ந்து ஆட்சேர்ப்பு நடைபெற்று வரும் நிலையில், நகரத்திலேயே வளர்ந்த இளைஞர்களை இந்தத் துறைகளில் ஈர்ப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
18 வயதான பயிற்சியாளர் Amildon Calongo, "ஐந்து வயது முதல் தீயணைப்பு வீரராக வேண்டும் என்பது என் கனவு. இந்தத் திட்டம் என் கனவை நனவாக்கும் முதல் படியாக உள்ளது," என்று தெரிவித்தார். மேலும், 16 வயதான Ryan De'ath மற்றும் Zak Jibreal ஆகியோர் இந்தப் பயிற்சியின் மூலம் தீயணைப்பு மற்றும் காவல்துறை பணிகளின் நடைமுறை அனுபவத்தைப் பெற்றதாகக் கூறினர்.
இந்த ஆண்டு முன்னோடி திட்டத்திற்கு டொரொன்டோ நகராட்சி, கனடா அரசு, Toronto Police Association, Toronto Professional Fire Fighters' Association, Cadillac Fairview மற்றும் Toronto Transit Commission ஆகியவை நிதி மற்றும் ஆதரவை வழங்கியுள்ளன. எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை மேலும் பல டொரொன்டோ பகுதிகளுக்கு விரிவுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்