கனடாவின் மிகப்பெரிய விமான நிலையமான டொரொன்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையம் (Toronto Pearson International Airport), விமான சேவைகள் தொடர்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான மற்றும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான நிலைய அதிகாரிகளின் தகவலின்படி, கடந்த சில மாதங்களாக பல பயண இணையதளங்கள் மற்றும் செய்தித் தளங்கள், விமானங்கள் தாமதம், ரத்து, தகவல் தொழில்நுட்ப கோளாறு போன்ற தலைப்புகளில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை AI மூலம் பெருமளவில் வெளியிட்டு வருகின்றன.
பியர்சன் விமான நிலையத்தின் பேச்சாளர் Sean Davidson கூறுகையில்,
"இந்த பிரச்சினை கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளது. சில இணையதளங்களில் ஒரு நாளுக்கு 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் AI மூலம் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதனால் பயணிகள் தேவையில்லாமல் விமான நிலையத்திற்கு வருவது, அல்லது தவறான தகவலால் தங்கள் பயணத்தை ரத்து செய்யவோ மாற்றிக்கொள்ளவோ வாய்ப்பு உள்ளது," என்றார்.
அதிகாரிகள் பலமுறை சம்பந்தப்பட்ட இணையதளங்களை தொடர்புகொண்டு தவறான தகவல்களை நீக்குமாறு கேட்டுக்கொண்டாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இந்த பிரச்சினை டொரொன்டோவில் மட்டும் அல்லாமல் வட அமெரிக்காவின் பல விமான நிலையங்களையும் பாதித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு நிபுணர் Ritesh Kotak கூறுகையில், இந்த போலி இணையதளங்கள் அதிகமான கிளிக்குகளைப் பெற்று விளம்பர வருவாய் ஈட்டுவதற்காகவே இவ்வாறான AI செய்திகளை வெளியிடுகின்றன என்றார்.
மற்றொரு சைபர் பாதுகாப்பு நிபுணர் Carmi Levy, இத்தகைய இணையதளங்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதோடு, மால்வேர் (Malware) மற்றும் ரான்சம்வேர் (Ransomware) போன்ற இணையத் தாக்குதல்களுக்கும் வழிவகுக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார்.
அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகள்
பயணிகள் விமான சேவைகள் தொடர்பான தகவல்களை அறிய,
விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சமூக ஊடகப் பக்கங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Toronto Pearson Airport-இன் அதிகாரப்பூர்வ தகவல் சேனல்களை நம்ப வேண்டும்.
உறுதிப்படுத்தப்படாத இணையதளங்களில் வெளியாகும் செய்திகளை பகிரவோ நம்பவோ கூடாது.
போலி AI செய்திகளை வெளியிடுவதாக பியர்சன் விமான நிலையம் குறிப்பிட்டுள்ள சில இணையதளங்கள்
TheTraveler.org
Toronto Digest
Travel and Tour World
NomadLawyer
Travel Tourister
இந்த இணையதளங்களில் வெளியாகும் விமான சேவை தொடர்பான தகவல்களை நம்புவதற்கு முன் அதிகாரப்பூர்வ மூலங்களில் சரிபார்க்குமாறு பியர்சன் விமான நிலையம் பயணிகளை வலியுறுத்தியுள்ளது.