அனுபவம் குறைவான ஓட்டுநர்களுக்கு கட்டாய சாலைத் தேர்வு
கியூபெக் அரசு, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் ஒன்டாரியோவில் பயிற்சி பெற்ற அனுபவம் குறைவான கனரக லாரி ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் ஜூலை 9 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
புதிய விதிகளின்படி, ஒன்டாரியோவில் கனரக லாரி (Class 1) ஓட்டுநர் உரிமம் பெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான அனுபவம் கொண்டவர்கள், கியூபெக்கிற்கு உரிமத்தை மாற்ற விரும்பினால், முதலில் கியூபெக்கின் வாகனக் காப்பீட்டு வாரியம் (SAAQ) நடத்தும் நடைமுறை சாலை ஓட்டுநர் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தத் தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்தால், கனரக வாகனங்களை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கு முன் கட்டாய பயிற்சியை முடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை கியூபெக் லாரி போக்குவரத்து சங்கம் வரவேற்றுள்ளது. சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Marc Cadieux கூறுகையில்,
"எங்கள் நிறுவனங்கள், ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து சாலைப் பயனாளர்களையும் பாதுகாப்பதற்கான முதல் பாதுகாப்பு நடவடிக்கையாக இது அமைகிறது. சாலைப் பாதுகாப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை," என்றார்.
இதனுடன், கியூபெக்கில் பணிபுரியும் தற்காலிக வெளிநாட்டு லாரி ஓட்டுநர்களுக்கான சாலைப் பாதுகாப்பு தரநிலைகளை மேலும் கடுமையாக்குவது குறித்து பரிந்துரைகள் வழங்க ஒரு புதிய நிபுணர் குழுவையும் அரசு அமைத்துள்ளது.
கியூபெக்கில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கடுமையான லாரி விபத்துகள் மற்றும் சில ஓட்டுநர்களின் பயிற்சி தரம் குறித்த எழுந்த கவலைகளைத் தொடர்ந்து இந்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம், பிற மாகாணங்களும் வணிக வாகன ஓட்டுநர் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கும் முறைகளை மறுபரிசீலனை செய்ய ஊக்கமளிக்கும் என போக்குவரத்து துறை பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.