கனடாவின் வயதான ஆண் 110வது பிறந்தநாளை கொண்டாடினார்

கனடாவின் வயதான ஆண் 110வது பிறந்தநாளை கொண்டாடினார்

கனடாவில் தற்போது வாழ்ந்து வரும் வயதான ஆணாகக் கருதப்படும் ஜோசப் மெரி ஆர்தர் (Joseph Mery Arthur) தனது 110வது பிறந்தநாளை மொன்றியலில் குடும்பத்தினருடன் சிறப்பாகக் கொண்டாடினார்.

1916 ஆம் ஆண்டு ஹைட்டியின் செயிண்ட்-மார்க் (Saint-Marc) நகரில் பிறந்த ஜோசப் ஆர்தர், சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் மொன்றியல் நகருக்கு குடிபெயர்ந்தார். பின்னர் அவரது 10 பிள்ளைகளும் அவருடன் இணைந்தனர். தற்போது அவருக்கு 25 பேரக்குழந்தைகளும், 15 கொள்ளுப்பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

110 வயதை எட்டியுள்ள நிலையிலும், ஜோசப் ஆர்தர் இன்னும் தன்னால் இயன்ற அளவில் சுயமாக நடந்து செல்லக்கூடிய உடல்நிலையுடன் உள்ளார். கண்பார்வை மங்கியிருந்தாலும், புத்தகங்கள் வாசிப்பதையும் நேரத்தை பயனுள்ளதாக கழிப்பதையும் அவர் தொடர்ந்து விரும்புகிறார்.

நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்ன என்று கேட்கப்பட்டபோது, அவர் சிரித்தபடி,

"வாழ்க்கையில் புத்திசாலித்தனமாக வாழ வேண்டும். எல்லாவற்றையும் அளவோடு செய்ய வேண்டும். அதுவே ரகசியம்,"

என்று கூறினார்.

அவரது கொள்ளுப்பேரக்குழந்தை ஒலிவியா-ரோஸ் சிம்மன்ஸ் கூறுகையில், தனது தாத்தா இன்னும் கொக்னாக் (Cognac) அருந்துவது, புத்தகங்கள் வாசிப்பது மற்றும் குறுக்கெழுத்துப் புதிர்களைத் தீர்ப்பது போன்ற பழக்கங்களை தொடர்கிறார் என்றும், அதுவே அவரது மனதை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதாக நம்புவதாக தெரிவித்தார்.

ஜோசப்பின் மகன் ஹெரால்ட் ஆர்தர் கூறுகையில், தனது தந்தையின் விளையாட்டு அறிவும், குறிப்பாக பேஸ்பால் மற்றும் டென்னிஸ் பற்றிய ஆழமான அறிவும், 110 வயதிலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக தெரிவித்தார். சமூகத்துடனான தொடர்பையும், ஒழுக்கமான வாழ்க்கை முறையையும் அவர் எப்போதும் கடைப்பிடித்ததாகவும் குடும்பத்தினர் பெருமையுடன் நினைவுகூர்ந்தனர்.

110 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜோசப் மெரி ஆர்தரின் வாழ்க்கைப் பயணம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, குடும்ப பாசம் மற்றும் மன உறுதியின் சிறந்த எடுத்துக்காட்டாக பலருக்கு ஊக்கமளித்து வருகிறது.