பொறுப்பை ஏற்றது மட்டும் போதாது; நீதி அமைச்சர் தற்காலிகமாக பதவி விலக வேண்டும்” – முஜிபுர் ரஹ்மான்

பொறுப்பை ஏற்றது மட்டும் போதாது; நீதி அமைச்சர் தற்காலிகமாக பதவி விலக வேண்டும்” – முஜிபுர் ரஹ்மான்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் உண்மைகள் வெளிப்படையாகவும், சுயாதீனமாகவும் வெளிக்கொணரப்பட வேண்டுமெனில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தற்காலிகமாக அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) உரையாற்றிய அவர், சம்பவத்தின் பொறுப்பை அமைச்சர் ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அதனுடன் பொறுப்புக்கூறலும் இணைந்திருக்க வேண்டும் என்றார்.

சிறைச்சாலை அதிகாரிகளே, ஆரம்பத்திலேயே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த வன்முறையைத் தவிர்த்திருக்க முடியும் என அமைச்சரிடம் தெரிவித்ததாகவும், சிறிய பிரச்சினையாக இருந்த நிலைமை சரியான நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படாததால் பாரிய அனர்த்தமாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதிகள் இருவர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னர், வெளிநாட்டு கைதிகள் 12 பேர் உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாகக் கருதப்பட்ட கைதிகளையும் அதேபோல் இடமாற்றம் செய்யாதது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர்களைக் கொண்ட விசேட விசாரணைக் குழுவை நியமித்துள்ளதால், அமைச்சர் பதவியில் தொடர்ந்தபடி அந்தக் குழுவின் முன் ஆஜராகுவது சுயாதீனத்தன்மை குறித்த சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, தனது பெயரை முழுமையாகத் தூய்மைப்படுத்திக் கொள்ளவும், விசாரணைக்கு எந்தவித தாக்கமும் இல்லாமல் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும், நீதி அமைச்சர் தற்காலிகமாகப் பதவியிலிருந்து விலகுவது பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும், அரசியல் பொறுப்புணர்வை முன்னிறுத்துவதாகக் கூறும் தற்போதைய அரசு, எதிர்க்கட்சியில் இருந்தபோது வலியுறுத்திய அரசியல் நெறிமுறைகளை இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், கடந்த காலங்களில் விசாரணைகளை எதிர்கொண்ட பல அமைச்சர்கள் தற்காலிகமாகப் பதவி விலகி பின்னர் மீண்டும் பொறுப்பேற்ற முன்னுதாரணங்கள் இருப்பதாகவும் அவர் நினைவூட்டினார்.